புதுடெல்லி: இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களை பாரதிய நியாய சன்ஹிதாவின்(பிஎன்எஸ்) பிரிவு 152 கையாள்கிறது. கடந்த 2022ல், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேசத்துரோகம் தொடர்பான காலனித்துவ கால தண்டனைச் சட்டத்தை பொருத்தமான அரசாங்க மன்றம் மறுபரிசீலனை செய்யும் வரை நிறுத்தி வைத்தது. மேலும், இந்தக் குற்றத்தைத் தூண்டும் புதிய எப்ஐஆர் எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152ன் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரிவு 152,முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ-ஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. 2022 ம் ஆண்டு, தேசத்துரோகச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதிமொழி அளித்தது.நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்த பிறகு, அரசாங்கம் பிஎன்எஸ்-சில் இந்த விதியை மீண்டும் அறிமுகப்படுத்த முடியாது என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கூறுகையில்,இந்திய ஒன்றியம் நீதிமன்றத்தின் முன் ஒரு உறுதிமொழியை அளித்திருக்கலாம். ஆனால் நாடாளுமன்றம் அதற்குக் கட்டுப்படவில்லை.ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு முழுமையான உரிமை உள்ளது என்று தெரிவித்தது.
