- உலகக் கோப்பை டி 20
- இந்தியா
- புது தில்லி
- உலகக் கோப்பை டி20 சூப்பர் 8
- மேற்கிந்திய தீவுகள்
- உலகக் கோப்பை…
புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றுகளில் ஆடி வரும் நடப்பு சாம்பியன் இந்தியா அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, நாளை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. இருப்பினும், சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. அதனால், நெட் ரன் ரேட் விகிதத்தில் சரிந்த இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவது கேள்விக் குறியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா 256 ரன்களை குவித்தது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியை 184 ரன்னுக்குள் கட்டுப்படுத்திய இந்திய அணி, 72 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்து நெட் ரன் ரேட் விகிதத்தை உயர்த்தியது. குரூப் 1ல் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியாவிடம் பெற்ற தோல்வியை அடுத்து, ஜிம்பாப்வே அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், குரூப் 1ல் 2 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் 1.791 பெற்றுள்ள வெஸ்ட் இண்டீசும், 2 புள்ளிகளுடன், மைனஸ் 0.100 நெட் ரன் ரேட் பெற்றுள்ள இந்தியாவும் கொல்கத்தாவில் நாளை நடக்கும் கடைசி லீக் போட்டியில் மோதவுள்ளன. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் எவ்வித சிரமமும் இன்றி 4 புள்ளிகளுடன் குரூப் 1ல் 2ம் இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேற முடியும். மாறாக, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி, அரை இறுதிக்கு தகுதி பெறும். அதேசமயம், மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டால், அதிக நெட் ரன் ரேட் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
சூப்பர் 8, குரூப் 1 புள்ளிப் பட்டியல்
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
தெ.ஆப்ரிக்கா 2 2 0 4 2.890
வெ. இண்டீஸ் 2 1 1 2 1.791
இந்தியா 2 1 1 2 -0.100
ஜிம்பாப்வே 2 0 2 0 -4.475
