×

சென்னையில் கிராம கோயில் பூசாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாதாந்திர ஊக்கத்தொகை இன்று வழங்குகிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மயிலாப்பூரில் இன்று நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதிவி எண்ணிக்கை ஆண்டிற்கு 1,250 ஆக உயர்த்தப்பட்டதோடு, நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதுவரை 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கிராம கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, பூசாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப நல நிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் இன்று நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், ஆதீன பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Village temple priests conference ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Minister ,Shekarbabu ,Mylapore ,Hindu ,Religious and Endowments Minister ,P.K. Shekarbabu ,Religious and Endowments Minister… ,
× RELATED விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை...