சென்னை: 2025-26 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2025-26 அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு அரவைப் பணியை மேற்கொண்டுள்ளன.
கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. முதலமைச்சரின் ஆணையின்படி, 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, 90,652 கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.246.14 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக முறையே 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50/- எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195/- எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215/-எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349/- எனவும் வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750/-லிருந்து ரூ.3,500/-என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021 முதல் 2026 வரையிலான கழக ஆட்சியில் சிறப்பு ஊக்கத்தொகையாக 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முதலமைச்சர் 2025-26ஆம் அரவைப் பருவத்திற்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி விரைந்து வழங்கிட ஏதுவாக போதிய நிதி ஆதாரம் இல்லாத தர்மபுரி, எம்.ஆர்.கே., மதுராந்தகம், திருத்தணி, செய்யார், செங்கல்ராயன், மோகனூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் சேர்த்து மொத்தம் 11 சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் சுமார் 17,991 கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர்.
முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகை தாமதமின்றி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சுமார் ரூ.2031.47 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையை உரிய காலத்தில் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
