- அஸ்வத்தாமன்
- ஆம்ஸ்ட்ராங்
- உயர் நீதிமன்றம்
- சென்னை பொலிஸ்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- பகுஜன் சமாஜ் கட்சி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 14 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் ஜாமீன் பெற்றவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல் உள்ளது. ஏற்கனவே முன்பகையும் உள்ளது.
அதனால், உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவர்கள் வெளியே இருந்தால் கண்டிப்பாக சாட்சிகளை கலைத்துவிடுவார்கள். எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் பெற்றவர்களில் அஞ்சலை மற்றும் பொற்கொடியை தவிர அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார் (எ) நூர், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார் ஆகிய 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
