×

கோவையில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரை சந்தித்து முதல்வர் ஆறுதல்

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிப்பவர் சோமு(எ) சந்தோஷ். மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவராக உள்ளார். இவரது மனைவி சுகன்யா. இவர்களின் மகள் வெண்பா (6). 2ம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி சிறுமி மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து, அவரது பெற்றோர் ஒப்புதலோடு வெண்பாவின் சிறுநீரகம், கல்லீரல், தோல் மற்றும் கண் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு சிறுமியின் பெற்றோர் சோமு (எ) சந்தோஷ், சுகன்யா ஆகியோரை சந்தித்து, சிறுமியின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்து, உறுப்பு தானம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். உடல் உறுப்பு தானத்தில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச்சடங்குகள் முதல்வரின் உத்தரவின் பேரில் அரசு மரியாதையுடன் கடந்த 2023 செப்டம்பர் 23ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில், உடல் உறுப்பு தானம் அளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* பெரியார் அறிவுலகத்தை விரைவில் திறந்து வைப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘மேற்கு மண்டலத்துக்கான அறிவு சுரங்கமாக நமது திராவிட மாடல் அரசு கோவையில் அமைத்து வரும் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். தங்கள் ஊருக்கு யார் வந்தாலும் கோவை மக்கள் பெருமிதத்தோடு அழைத்துச் சென்று காண்பிக்கும் சிறப்புக்குரிய அறிவுக்கோயிலாக இதனைக் கூடிய விரைவில் திறந்து வைப்பேன். மேலும் ‘என் வாழ்வே எனது செய்தி’ என வாழ்ந்து இந்தியர்களின் இதயங்களில் நிறைந்த அண்ணல் காந்தி அவர்களின் நினைவகத்தையும் பார்வையிட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* திடீர் ரோடு ஷோ மாணவிகள் உற்சாகம்
கோவை போத்தனூர் சுங்கம் நிர்மலா கல்லூரி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் வந்த போது, கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கையில் லேப்டாப்களுடன் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று, திடீர் ரோடு ஷோ நடத்தினார். மேலும் கல்லூரி மாணவிகளிடம் கைகுலுக்கி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அப்போது லேப்டாப் வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்ததோடு ‘’மீண்டும் நீங்கள்தான் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும். எங்களது வாக்கு உங்களுக்குத்தான்..’’ எனக்கூறி ஆதரவு தெரிவித்தனர்.

* ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணியை முதல்வர் ஆய்வு
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024 நவம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டினார். பெரியார் அறிவுலகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள மையத்தின் மாதிரி வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் குறித்த புகைப்படங்கள், புத்தகங்கள், வசதிகள் போன்றவற்றையும் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்ட அவர், மையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, குறுகிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, போத்தனூரில் உள்ள காந்தி நினைவகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அங்குள்ள காந்தியின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருங்காட்சிய வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், புகைப்பட கண்காட்சி தொகுப்புகளை முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடந்த தனியார் பள்ளி மாணவிகள் பஜனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர்கள் பாடிய காந்திக்கு பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடல் முழுவதையும் முதல்வர் ரசித்து கேட்டார்.

Tags : Chief Minister ,Coimbatore ,M.K. Stalin ,Somu (A) Santosh ,R.S. ,Puram ,Municipal Corporation Town Planning Committee ,Sukanya ,
× RELATED விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை...