துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள 16 தெருக்களில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு , இராயபுரம் மற்றும் வி.க. நகர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (25.02.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இராயபுரம் மண்டலத்தில் புதியத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மாநகராட்சி மூலமாகவும், சி.எம்.டி.ஏ. மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடசென்னைப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றம் வகையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்புத் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக இன்று துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, இராயபுரம் மண்டலத்தில் 54, 55, 56, 57, 59 மற்றும் 60ஆவது வார்டுகளில் 16 தெருக்களில் உள்ள சாலைகள் தரம் உயர்த்திடும் வகையில், ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைத்திடும் பணியினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் , இராயபுரம் மண்டலம், என்.எஸ்.சி. போஸ் சாலையில் தொடங்கி வைத்து, பணிகள் அனைத்தும் திட்ட காலத்திற்குள் தரமாக மேற்கொண்டு முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்தப் பணியினால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சாலை வசதிப் பெற்று மிகவும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் , வி.க. நகர் மண்டலம், புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சி.எம்.டி.ஏ. சார்பில் ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்டு மற்றும் வார்டு-73, புளியந்தோப்பு திருவேங்கடம் சாமி தெருவில் ரூபாய் 4.29 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சென்னை ஆரம்பப் பள்ளியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இராயபுரம் மண்டலம், வார்டு-57, ரமணன் தெரு சந்திப்பு, வ.உ.சி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் போக்குவரத்து தீவு (இந்திரா காந்தி சிலை) மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் வெ.பரிமளம், சிவராஜசேகரன், அம்பேத்வளவன், மு.சரவணன் மண்டல அலுவலர் விஜய்பாபு, செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: