ஒரு வருடத்தில் 127.287 கிலோ தங்கம் கடத்தியதாக புகார்: நடிகை ரன்யா ராவ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

 

பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்பட 3 பேர் மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் ஒரு வருடத்தில் ரூ.102.55 கோடி மதிப்புள்ள 127.287 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், சிவில் அமலாக்க இயக்குனரக டிஜிபி.யுமான ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ் (34). கன்னட பட நடிகையான இவர் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி இரவு துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்தார்.

அவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, டிஆர்ஐ எனும் வருவாய் புலனாய்வு பிரிவின் பெங்களூரு அதிகாரிகள், ரன்யா ராவை சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடம் இருந்து, ரூ.12 கோடி மதிப்பிலான 14.20 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து தங்கம் கடத்தியதில், ரன்யா ராவின் முன்னாள் காதலனும், தெலுங்கு நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, ெபல்லாரி தொழிலதிபர்கள் ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.

அவர்களும் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். காபிபோசா சட்டத்தில் ஜாமின் கேட்டு 4 பேரும் பல முறை, பொருளாதார குற்றப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர் ஆனால் கிடைக்கவில்லை. 4 பேரும் சிறையில் இருந்து ஓராண்டு வெளியே வராமல் இருக்கும் வகையில், காபிபோசா சட்டத்தையும், வருவாய் புலனாய்வு பிரிவு அமல்படுத்தியது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, அமலாக்க துறை விசாரித்து ரன்யாவுக்கு சொந்தமான ரூ.34.12 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் அமலாக்க துறை பெங்களூருவில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் கன்னட நடிகை ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.102.55 கோடி மதிப்புள்ள 127.287 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளது. ஹர்ஷவர்தினி ரன்யா என்ற ரன்யா ராவ், அவரது முக்கிய கூட்டாளியான தருண் கொண்டுரு ராஜு என்ற விராட் கோந்துரு மற்றும் கடத்தலுக்கு உதவியதாக ெபல்லாரியை சேர்ந்த நகைக்கடை வியாபாரி சாஹில் சகாரியா ஜெயின் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories: