மடப்புரம் காவலாளி மரண வழக்கு டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்: மதுரை நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் ஆஜராகாத மானாமதுரை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைதாயினர். இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் 7வது குற்றவாளியாகவும், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் 8வதாகவும், எஸ்ஐ சிவக்குமார் 9வதாகவும், ஏட்டு இளையராஜா 10வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது குற்றச்சதி, தவறாக சிறை வைத்தல், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் பொய் தகவல் கொடுத்து குற்றத்தை மறைத்தல், அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த 4 பேரும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அசன் முகமது (பொறுப்பு) முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோர் ஆஜராகினர். மானாமதுரை டிஎஸ்பி தரப்பில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்தார். பின்னர் மானாமதுரை டிஎஸ்பிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: