×

பழநிமலை சிரசு விபூதி

வேண்டிய ஞானக்கனி கணபதிக்கு விடையேறும் பெருமனாம் சிவபெருமான் வழங்கியதால் வெஞ்சினத்துடன் முருகன் நின்றதே பழநிமலை. இந்தத் தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒன்பான் விடக்கலவை (நவபாசாணம்) சிலையாகும். இந்த முருகப்பெருமானுக்கு சிரசுமுதலாகச் செய்யப்படும் விபூதித் திருமஞ்சனமானது மிகச் சிறப்புடையது. இந்தத் திருநீற்றையே ‘சிரசு விபூதி’ என்று போற்றுகிறோம். தண்டாயுதபாணி சுவாமிகள் ஒருநாளைக்கு ஆறுகால பூசையிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தப் பெருமானுக்கு நல்லெண்ணய், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் திருநீறு ஆகிய பொருட்களே அதிகமாகத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

மார்கழி மாதத்தில் மட்டுமே பன்னீர் அபிஷேகம் நடைபெறும். சந்தனம் மற்றும் பன்னீரைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் சிரசில் (தலை) வைத்தவுடன் அகற்றப்படுகின்றன. திருநீறும் அப்படித்தான் சிரசு விபூதியாகப் போற்றப்படுகிறது. இந்தத் திருநீறு அனைத்து பக்தர்களுக்கும் சித்தரின் உத்தரவால் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் கிடைப்பது மிகவும் அரியதாகும்.

ஒன்பாண விடக்கலவைத் (நவபாசானம்) திருவுருவம் என்பதால் அவருக்குச் செய்யப்படும் அபிஷேகப் பொருட்கள் அனைத்தும் உடற்பிணியைப் போக்கும். திருநீறோ உடற்பிணியுடன் உள்ளப் பிணியையும் போக்கும். தண்டாயுதபாணி சுவாமியின் திருமஞ்சனத்திற்கு எல்லா விபூதிகளும் பயன்படுத்தப் படுவதில்லை. திருக்கோயில் தேவஸ்தானத்தில் வளர்க்கப்படும் நாட்டுமாடுகளிலிருந்து கிடைக்கும் பசுஞ்சாணத்தைக் கொண்டு முறையாகத் தயாரிக்கப்படும் திருநீறே பயன்படுத்தப்படுகிறது.

உரை எழுத ஊக்குவித்த திருநீறு

பெரியபுராணம் முழுவதற்கும் பேருரை எழுதியவர் சிவக்கவிமணி சி.கே.சுப்பிர மணிய முதலியார் அவர்கள். இவர் கோவையில் வாழ்ந்த வழக்கறிஞர். பெரியபுராணத்திற்கு விரிவுரை எழுதத் தொடங்கிய இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் முழுமையாக உரையெழுதி முடிக்க இயலவில்லை. அதனால் எழுதி அச்சேறிய சில பிரதிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் எடுத்துச் சென்று சிதம்பரத்தில் நடராசப் பெருமானின் முன்னர் ஒப்படைக்க எண்ணினார்.

1948 ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சனத்தன்று, அச்சிடப்பட்ட பகுதிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சிதம்பரத்திற்கு எடுத்து வந்து கோயிலை வலம் வந்து சிவகாம சுந்தரியம்மை உடனுறை அம்பலவாணப்பெருமான் திருமுன்பு வைக்க, தில்லைவாழ் அந்தணர்கள் அதற்கும் வழிபாடுசெய்து, சிவக்கவிமணியாருக்குத் திருநீறு வழங்கி வாழ்த்தினர். தில்லைப் பெருமானின் திருநீறு அணிந்த சிவக்கவிமணி பெரியபுராணம் முழுவதுமாகப் பேருரை எழுதினார். இதற்கு ஊக்க சக்தியாக இருந்து ஊக்குவித்தது நடராசப் பெருமானின் அருட்திருநீறே.

திருநீற்றுப்பை வழங்கிய சிவபெருமான்

‘‘சமயத்திலுள்ள நீறு’’ என்று திருஞானசம்பந்தர் திருநீற்றைப் போற்றுவார். நம்மிடத்தில் திருநீறு எல்லாச்சமயத்திலும் இருக்க வேண்டும். அதற்கு திருநீற்றுப் பையில்தான் வைத்திருக்க வேண்டும். சிவபெருமானே பகைவர்களை எரித்த சாம்பலை தனது விபூதிப் பையில் வைத்துள்ளார். அது ‘அநாதி விபூதி’ எனப்படும். திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் இடையாறு என்ற தலம் உள்ளது. பாண்டிய மன்னன் தன்னுடைய படையை இழந்திருந்தபோது சிவபெருமான் முனிவராக வந்து விபூதிப் பையை மன்னனுக்கு வழங்கி ஊக்கவார்த்தைகள் வழங்கினார்.

இதனால் இறைவன் ‘‘பொக்கணம் கொடுத்தருளிய நாயனார்’’ என்று இத்தலத்திலுள்ள கல்வெட்டு கூறுகிறது. பொக்கணம் என்றால் பை என்று பொருள். அடியார்கள் திருநீற்றுப்பை வைத்திருப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். துறவிகள், ஓதுவாமூர்த்திகள், அர்ச்சகர்கள் என அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜெயசெல்வி

Tags : PALANIMALAI ,SIRASU VIBOOTHI ,Murugan ,Perumanam ,Shivaberuman ,Gnanakani ,Ghanakani Kanapati ,Thirumeni Onban Vidakalawa ,Vibudit ,Thirumanjanana ,Murukapperuman ,
× RELATED மலர்களின் நாமங்களில் மாதொருபாகன்