- திருச்செங்காட்டங்குடி
- உத்தரபதீஸ்வரர் கோயில்
- திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம்
- சிவன்
- கோவில்
- காவிரி
- இறைவன்
- சிறுத்தொண்டர்
- பகவான் விநாயக
- கஜமுகாசுரன்
ஆலயம்: உத்தராபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில், 79வது சிவத்தலமான திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில், சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள் புரிந்த தலமாகும். விநாயகப் பெருமான், கஜமுகாசுரனைக் கொன்ற போது, அசுரன் உடலினின்றும் பெருகிய ரத்தவெள்ளத்தால் இப்பகுதி முழுவதும் செந்நிறமானதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
இறைவன்: உத்தராபதீஸ்வரர்
இறைவி: சூளிகாம்பாள் (குழலம்மை)
பொ.ஆ.642ல் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நரசிம்ம பல்லவன், சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினார். அப்போது அவரின் தளபதி பரஞ்சோதி வாதாபியி லிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் “வாதாபி கணபதி’’ என்ற பெயரில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார். ஒட்டிய வயிறுடன் இந்த விநாயகர் காட்சி தருகிறார். சாளுக்கிய வெற்றிக்குப்பின் பல்லவ மன்னவரிடமிருந்து பரஞ்சோதியார் இறைப்பணி புரிய விடைபெற்றார்.
தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்து, அங்கு கணபதீச்சரத்து இறைவனுக்கு `சிறு தொண்டர்’ என்ற பெயர் பெற்று சிவத்தொண்டு புரிந்து வந்தார். சிறுதொண்டரின் சிவபக்தியை சோதிப்பதற்காக இறைவன், அடியவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்க, இறைவனுக்குத் தன் குழந்தையையே சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனார், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, குழந்தை சீராளன், பணிப்பெண் சந்தன நங்கை ஆகிய நால்வருக்கும் முக்தி அளித்தவர், இத்தல இறைவன்.
“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைநாள் பயப்பூரச்
சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே’’ (சம்பந்தர்)
“அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்
திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே’’ (அப்பர்)
இக்கோயிலில் பேழையில் மரகதலிங்கம் வைக்கப்பட்டுள்ளது, மற்றொரு சிறப்பு. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். தோரணங்கள் எழில் தோற்றம் பெரிதும் கவர்கின்றன.
கருவறை வெளிச் சுவர்களில் உள்ள சோழர் கால கல்வெட்டுகள் – முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோரின் ஆலயத் திருப்பணி மற்றும் நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டுக்களில் செங்காடுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர், கணபதீஸ்வரமுடையார் என்று இறைவன் பெயரும், “மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி’’ என்று தலத்தின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. இத் திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ளது.
மது ஜெகதீஷ்
