சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை: 26, 27ம் தேதி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 7 பேர் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 10ம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவைக்கான ஆயுட்காலம் முடிவடைகிறது. இதனால் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதன் காரணமாக, தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தி வருகிறது. அதேநேரம், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர்கள் கடந்த வாரம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் தேர்தல் தொடர்பான ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது அறிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி மற்றும் இணை, துணை தேர்தல் ஆணையர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேர் இன்று (25ம் தேதி) காலை 9.55 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு சென்னைக்கு வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கின்றனர். அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு அங்ேகயே தங்குகின்றனர்.

நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, காலை 11 மணிக்கு சென்னைக்கு வருகின்றனர். பின்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலான லீலா பேலசுக்கு செல்கின்றனர். அங்கிருந்தபடி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குகின்றனர். சென்னையில் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அன்றிரவு அங்கேயே தங்குகின்றனர். நாளை மறுதினம் (27ம் தேதி) காலையில் இருந்து மாலை வரை தமிழக தேர்தல் தொடர்பான அதிகாரிகளுடன் 2வது நாள் ஆலோசனை நடக்கிறது.

இந்த ஆலோசனையின்போது, தலைமைச் செயலாளர், டிஜிபி, வருமானவரி துறை, சுங்கத்துறை, அமலாக்க துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் (தேர்தல் அதிகாரிகள்), காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் தொடர்பான கருத்துகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேட்கிறார். இந்த பணிகள் முடிந்ததும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் ஏற்பாடுகள், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளிப்பார். 27ம் தேதி மாலையுடன் தேர்தல் குறித்த 2 நாள் ஆலோசனை நிறைவு செய்துவிட்டு, மாலையில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் டெல்லிக்கு செல்கின்றனர். ஏற்கனவே மார்ச் 10ம் தேதி தமிழகத்துக்கு 50 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகின்றனர் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வந்து ஆலோசனை நடத்துகிறார். இதனால் மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். ஏப்ரல் 2 அல்லது 3வது வாரத்தில் தமிழகத்தில் ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் குழுவினர் சென்னை வருவது, பின்னர் புதுச்சேரி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: