எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மேலும் குறைப்பு

சென்னை: இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவையில் இரு மார்க்கத்திலும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அது 164 ஆக குறைக்கப்பட்டு தற்போது 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 45 நாட்களுக்கு ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், 204 ரயில் வேவைகள் 164ஆக குறைக்கப்பட்ட நிலையில், மேலும் ரயில் சேவை குறைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. நேற்று அலுவலக நாள் என்பதால் காலை முதலே தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது.

இதனால் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிக அளவிலான பயணிகள் கூட்டம் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்குகிறது.

Related Stories: