சென்னை: தென்னக ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனைத் தவிர்க்க உடனடி மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்னக ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளுக்காக தென்னக ரயில் சேவைகள் மற்றும் மின்சார ரயில் சேவைகளை திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த திடீர் நடவடிக்கை காரணமாக பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர்.
தினமும் ரயிலை நம்பி பயணம் செய்யும் அனைவரும், தேர்வு காலத்தில் மாணவர்கள், உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தென்னக ரயில் சேவைகளும் மின்சார ரயில் சேவைகளும் முழுமையாக பராமரிப்பு பணிகள் என்ற காரணத்தால் நிறுத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே அறிவித்து மாற்றுத் பயணத் திட்டத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திடீரென்று ரயில்கள் ரத்து செய்வது முறையல்ல. “பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தற்காலிக அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களை மட்டும் பொறுப்பேற்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு பதிலாக, ரயில்வே நிர்வாகம் என்ன மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க தென்னக ரயில்வே நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, மாற்று போக்குவரத்து மற்றும் கூடுதல் ரயில் சேவை ஏற்பாடுகளை செய்து, பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
