×

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது: காங்கிரஸ் கண்டனம்

சென்னை: மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை தமிழக மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது. இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union BJP government ,Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvapperundakai ,Rameswaram Pamban ,
× RELATED அதி தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல்