×

புறநகர் ரயில் சேவை குறைப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி: உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

நெல்லை: புறநகர் ரயில் சேவை குறைப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளைக் காரணம் காட்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில் சேவைகளைக் கணிசமாகக் குறைத்துள்ள ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த முக்கியமான போக்குவரத்துச் சேவையை, உரிய மாற்று ஏற்பாடுகள் இன்றித் தன்னிச்சையாகக் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகளுக்குப் பதிலாக, தற்போது 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும், இந்தத் தற்காலிக மாற்றம் வரும் ஏப்ரல் 5, 2026 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்கள் நீண்ட இடைவெளியில் இயக்கப்படுவதால், குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் தொழிலாளர்களும், தேர்வுகள் மற்றும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறைவான எண்ணிக்கையிலான ரயில்களே இயக்கப்படுவதால், தற்போது இயக்கப்படும் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் ரயில்களில் ஏற முடியாமலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் இவ்வளவு பெரிய மறுசீரமைப்புப் பணியை மேற்கொள்ளும் முன்பே, பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு முறையான மாற்றுப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்திருக்க வேண்டும்.

எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். மறுசீரமைப்புப் பணிகளைப் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிட வேண்டும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக, கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவும், தமிழக அரசுடன் இணைந்து கூடுதல் மாநகரப் பேருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் இயக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையான தடையற்ற போக்குவரத்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : SDBI ,president ,Nella Mubarak ,Chennai Rampur ,
× RELATED தூத்துக்குடியை சேர்ந்த ஏ + கேட்டகிரி...