×

வன்முறையை தூண்டியதாக பேசிய வழக்கு திருமாவளவன் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக திருமாவளவன் மீது ஒதியம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி நீதிமன்றம் 2025ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் முன் அனுமதி பெறாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசின் முன் அனுமதி தேவையில்லை என்பதால் வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அரசின் முன் அனுமதி பெறவில்லை. எனவே, புதுச்சேரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டார்.

 

Tags : Thirumavalavan ,Chennai ,Odhiyampet ,Puducherry ,
× RELATED சிறப்பு டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி