×

நான் கட்சியில் சேர்ந்தபோது அவர் பிறக்கக் கூட இல்லை கே.சி.வேணுகோபால் யார்? நேற்று காங்கிரசுக்கு வந்தவர்: மணிசங்கர் ஐயர் விமர்சனம்

 

சென்னை: கே.சி.வேணுகோபால் யார்? நேற்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் விமர்சனம் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படாது என்று கே.சி.வேணுகோபால் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: கே.சி.வேணுகோபால் நேற்றைக்குக் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். நான் அவர் பிறப்பதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறேன். அவர் யார் என்னைப் பற்றி இப்படிச் சொல்வதற்கு. அவர் ராஜிவ்வுடன் இருந்தாரா? நான் ஐஎப்எஸ்ஸாக பணியாற்றியவன். ஆனாலும் நான் ராஜினாமா செய்து ராஜீவுடன் பணியாற்றி, அவரால் தான் அரசியலுக்கு வந்தேன். ராஜிவ் காந்தி தவறிப்போனதுக்கு ஒரே காரணம் நான்தான். என்னை ஆதரிக்கத்தான் அவர் பெரும்பத்தூர் வந்தார்.

அந்த நேரத்தில் நான் அவருக்காக மயிலாடுதுறையில் காத்துக்கொண்டு இருந்தேன். அவர் வரவே இல்லை. இங்கு அவரின் படுகொலை நடந்ததால், அவரால் வரமுடியவில்லை. வேணுகோபால் யார்? அவரைப் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி போட்டுள்ளார். ராஜிவ் போட்டு இருப்பாரா? எதுக்காக வீணாக என்னைப் பிடித்து அவமானம் செய்கிறார்கள். 85 வயதான என்னிடம் ஏன் இவ்வளவு பயம். எதற்காக என்னைப் பற்றி இவ்வளவு பேசுகிறார்கள்.
என்னைக் கைவிட்டு விட்டார்கள். நான் யாரும் இல்லை; என்னை இங்கு நீங்கள் கூப்பிடக் காரணம் வேணுகோபால் தானே. இல்லை என்றால் கூப்பிட்டு இருப்பீர்களா? வேணுகோபால் வீணாக என்னைத் திட்டியதால் என்னை இங்கு கூப்பிட்டீர்கள். நீங்கள் சொல்லித்தான் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிந்தது. இல்லை என்றால் என்னை எல்லோரும் மறந்து விட்டார்கள் என நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். வேணுகோபாலின் காரணமாக நான் மீண்டும் இங்கு உருவாகி வந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : K.C. Venugopal ,Congress ,Mani Shankar Aiyar ,Chennai ,Congress party ,Mani Shankar Aiyar's… ,
× RELATED சிறப்பு டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி