- கே.வி.குப்பம்.
- K.V.Kuppam
- வடுகந்தாங்கல் ஊராட்சி
- பிராந்திய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட சேவைகள் துறை…
கே.வி.குப்பம், பிப்.24: கே.வி.குப்பத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழா கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர், எம்பி வழங்கினர். கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சியில் தனியார் மண்டபத்தில் நேற்று வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சீதாராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயா, முருகேசன், சரளா, கலைவாணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சுப்புலட்சுமி, எம்.பி கதர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். தொடர்ந்து ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கியும், அங்கு வைக்கப்பட்டிருந்த சுகாதார துறையினரின் பரிசோதனை சேவையும் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி கர்ப்பிணி பெண்கள் கையில் வளையலிட்டு பேசியதாவது: கருவுற்ற நாள் முதல் 6 மாத காலம் வரை சுமார் ஆயிரம் நாட்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போய் சேர்கின்றதா? என கண்காணிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்கள் விஷயத்தில் முதல்வர் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கான தொடர் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக தான் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . எதிர்கால தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஒரு தாய்க்கு தான் உண்டு. குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை சத்தான உணவு வழங்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் இன்று முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். எதேனும் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து அதற்குரிய சிகிச்சையை பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
