×

காப்புக்காடுக்கு விஷமிகள் தீ மூலிகை செடிகள் கருகின வள்ளிமலை அருகே

பொன்னை, பிப்.24: வள்ளிமலை அருகே பெருமாள் குப்பம் பகுதியை ஒட்டி உள்ள காப்புக்காடுக்கு விஷமிகள் தீ வைத்தனர். காட்பாடி தாலுகா, வள்ளிமலை அடுத்த மகிமண்டலம், பெருமாள் குப்பம், போடி நத்தம் உள்ளிட்ட பகுதிகளையொட்டி வனத்துறை பராமரிப்பில் அடர்ந்த காப்புக்காடுகள் உள்ளது. இங்கு மயில், மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் மற்றும் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளன. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்தும், சமூக விரோதிகளிடம் இருந்தும் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பெருமாள் குப்பம் பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் காப்புக்காடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதன் காரணமாக அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகியது. அதேபோல் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள வீடுகளுக்கு காட்டுத்தீ பரவும் ஆபாயம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க வேண்டும், வனங்களுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vallimala ,Ponnai ,Perumal Kuppam ,Forest Department ,Mahimandalam ,Bodi Natham ,Katpadi taluka ,
× RELATED சூப்பர்மார்க்கெட்டில் உலர் திராட்சைகள் திருட்டு