வேலூர், பிப்.21: சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், எஸ்பி ஆய்வு செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தலுகான முன்னேற்பாடுகள் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதி காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி வாணி வித்யாலயா பள்ளி, சேண்பாக்கம் அரசினர் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும், வேலூர் சட்டமன்ற தொகுதி தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி, எஸ்பி சிவராமன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, வாக்குச்சாவடி மையத்தில் 5 வாக்குச்சாவடிகள் மேல் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் மற்றும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது, ஆர்டிஓ செந்தில்குமார், காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மாறன், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் ஜெகதீஸ்வரன்(காட்பாடி) வடிவேல்(வேலூர்) உட்பட பலர் உடனிருந்தனர்.
