மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் திமுக, மதுரை தெற்கில் திமுக கூட்டணியான மதிமுக, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், மதுரை மேற்கு ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக, உசிலம்பட்டி தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளரும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக உள்ளனர்.
2024ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் ராமசீனிவாசன் 2,20,914 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2,04,914 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவை விட பாஜ கூடுதல் வாக்குகள் பெற்றது. குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றனர்.
இதேபோல் மற்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பாஜவிற்கு கிடைத்தன. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, மதுரையில் திமுகவிற்கு அடுத்தபடியாக நாங்கள் தான் பெரிய கட்சி என்ற ெதானியில் பாஜவினரின் நடவடிக்கைகள் இருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலை இருவரும் கூட்டணியாக சந்திக்கின்றனர். இனிமேல்தான் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், மதுரையில் நாங்கள் தான் பெரிய கட்சி என்ற அடிப்படையில் பாதிக்கு பாதி தங்களுக்கு வேண்டும் என்ற வகையில் பாஜ நிர்வாகிகள் பட்டியலை கொடுத்துள்ளார்களாம். அதில், முதல் இடத்தில் மதுரை தெற்கு, 2வதாக திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மேலூர் ஆகிய தொகுதிகள் கட்டாய முன்னுரிமை பட்டியலில் உள்ளதாம். மதுரை தெற்கு தொகுதியில் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அந்த தொகுதி கட்டாயம் வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் கட்சிக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்ததால் அந்த தொகுதியும் வேண்டும் என பட்டியலில் கேட்டுள்ளனர்.
இதுபோக மதுரை வடக்கு தொகுதி தங்களின் நீண்டகால கூட்டணி கட்சியான தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறனுக்காக வேண்டும் என்றும், பாஜ மாவட்ட தலைவர் ராஜசிம்மனின் சொந்த தொகுதி என்பதால் மேலூர் தொகுதியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. எனவே, அந்த தொகுதியும் வேண்டுமென கூறியுள்ளனர். மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் 4 தொகுதிகள் தேவை, இதில் குறைந்தது மூன்று தொகுதியாவது கட்டாயம் என தலைமையிடம் கூறியுள்ளனர்.
தற்போது மதுரை தெற்கு ஏறக்குறைய பாஜவிற்குத்தான் என உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இங்கு யார் வேட்பாளர் என்பதில் பாஜவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியை குறிவைத்து ஏற்கனவே மகளிரணி நிர்வாகியான மகாலட்சுமி, வேலை பார்த்து வருகிறார். நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் அவ்வப்போது ஏதாவது கொடுத்து கொண்டே இருக்கிறார். இவருக்கு போட்டியாக மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான ராம.சீனிவாசன், ‘‘நான் ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நிறைய செலவு செய்து விட்டேன்.
இதனால், இந்த முறை எனக்கு தான் வாய்ப்பளிக்க வேண்டும்’’ என மாநில தலைமையிடம் ரொம்பவே கறார் காட்டி வருகிறாராம். இதனால், மதுரை மாவட்டத்தில் சீட்டுகளை பங்கீடு செய்வதில் அதிமுக – பாஜ கூட்டணி மட்டுமின்றி பாஜவிற்குள்ளும் கடும் முட்டல், மோதல்கள் துவங்கியுள்ளன. அதேநேரம் பாஜ கேட்கும் தொகுதிகளுக்கு துண்டு போட்டு வைத்திருக்கும், அதிமுக தரப்பு சீனியர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
