திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் அரசு மருத்துவமனை முன் உள்ள மசூதி அருகே, வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் உதயகுமார் நேற்று முன்தினம் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது விசில் அடித்தவாறு இருந்ததால், பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு ‘ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தவறு செய்பவர்கள்போல் எதிரான கருத்தை வெளியிட்டு விட்டு எந்த முகத்துடன் உங்கள் தலைவருக்காக எங்களிடம் வாக்கு கேட்கின்றீர்கள்’ என அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்தபடி தவெக வேட்பாளர் மற்றும் அவருடன் வந்தவர்களை விரட்டியடித்தனர்.
அதேபோல் இவர்கள் நகராட்சி தலைவர் ஜலால், வீட்டில் இருந்தபோது விசில் அடித்து அட்ராசிட்டி செய்தனர். இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான கடையில் நகராட்சி தலைவர் அமர்ந்திருந்தபோது அங்கும் வந்த தவெகவினர், தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் சேர்ந்து ஜனநாயகன் படத்தில் தவறு செய்பவர்களாக காட்டியதால், இஸ்லாமியர்களை மற்ற சமூகத்தினர் தவறாகத்தான் பார்ப்பார்கள் எனக்கூறியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மைக்கை பிடித்து இழுத்து தவெகவினரை விரட்டியடித்தனர். இதேபோல் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் உதயகுமார், தவெகவினருடன் சேர்ந்து திமுக நிர்வாகி பழனி ராஜா வீட்டின் முன் நின்று அவதூறாக பேசியுள்ளார். கிராம மக்கள் கும்பலாக சேர்ந்து அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவம் வந்தவாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
