ஊட்டி தொகுதியில் பாஜ சார்பில் போஜராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக உள்ளூர் மக்களை காட்டிலும் வெளி மாநிலங்கள் குறிப்பாக டெல்லியில் இருந்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜ முக்கிய நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று ஊட்டி வந்தார். இவர் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு சாதாரண மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டத்தில் கன்னடம் பேசும் சில உயர்தட்டு மக்கள் மற்றும் நீலகிரியில் வசிக்கும் உயர்தட்டு மக்களின் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
மேலும், சில ஹைடெக் சங்கங்களை சந்தித்து அவர்களிடம் போஜராஜனுக்கு ஆதரவு கேட்டுக் கொண்டார். கூட்டணி கட்சிகளையோ அல்லது மக்களையோ அவர் சந்தித்து ஓட்டு சேகரிக்காமலும், சந்திக்காமலும் சென்றது அதிருப்திக்குள்ளாக்கியது. முன்னதாக பியூஸ் கோயல் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.
