சென்னை: காங்கிரஸ் கட்சியில் இனிமேல் கூட்டணி குறித்து முரண்பாடான கருத்துகளை யாரும் சொல்ல மாட்டார்கள் என கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தை நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது.
எத்தனை இடங்கள், எந்தெந்த இடங்கள் என்பதை எங்களுடைய கட்சி தலைமை பார்த்துக் கொள்வார்கள். எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்களோ? அதே நீதிமன்றம் மூலம், அதற்கு பரிகாரம் தேடப்படும். இதற்கு முன்பு எவ்வளவோ வழக்குகள் போட்டார்கள். அதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை. அதைப்போல் இப்போது திமுக அமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளையும், திமுகவும், அமைச்சர்களும் எதிர்கொள்வார்கள்.
காங்கிரசில் இருப்பவர்கள் இனிமேல் கூட்டணி குறித்து முரண்பாடான கருத்துகளை சொல்ல மாட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள். இருமொழி கொள்கையில் படித்தவர்கள், அயல் நாடுகளில் கவுரவமான பணிகளில் உள்ளனர். இந்தி படித்தவர்கள் பானி பூரி விற்றுக் கொண்டும், கஞ்சா கடத்திக் கொண்டும் இருப்பதாக கனிமொழி கூறியிருப்பது கரெக்ட். அவர்கள் கருத்தை அவர்கள் கூறியுள்ளனர். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
