* 144 புத்தொழில் முனைவோர்களுக்கு ரூ.7.21 கோடி மானியம் நிதி உதவி
* சிறந்த புத்தாக்க சூழல் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்
சென்னை: தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மதிப்பானது 66 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது தேசிய அளவில் தமிழ்நாடு 2வது இடம் வகிக்கிறது. மேலும் 144 புத்தொழில் முனைவோர்களுக்கு ரூ.7.21 கோடிக்கு மானியம் மற்றும் நிதி உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
சென்னை நந்தனம் ஸ்டார்ட்அப்- டிஎன் நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புத்தொழில்முனைவோர்களுக்கு ரூ7.21 கோடி மதிப்பில் மானியங்களையும் நிதியுதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் 23 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.2 கோடியே 90 லட்சம் ஆதார நிதியும், கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் இயங்கும் 62 புத்தொழில் முனைவோருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.62 லட்சம் மானியத்திற்கான ஒப்புதல் ஆணைகளும்,
தொழில்நுட்ப பரிமாற்ற நிதி உதவி திட்டத்தின் கீழ் 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்திற்கான நிதி ஒப்புதல் ஆணைகளும், தொழில் வளர் காப்பக நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் 39 தொழில் வளர் காப்பகங்கள் அமைக்க தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒப்புதல் ஆணைகளும், தொழில் வளர் காப்பக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 தொழில் வளர் காப்பக மேம்பாட்டிற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ. 75 லட்சத்திற்கான நிதி ஒப்புதல் ஆணைகளும் என 144 புத்தொழில் முனைவோருக்கு ரூ.7 கோடியே 21 லட்சம் மானியம் மற்றும் நிதி வழங்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 87 தொழில் வளர் காப்பகங்களுக்கு ரூ.6 கோடியே 52 லட்சமும், தொழில் வளர் காப்பக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 62 தொழில் வளர் காப்பகளுக்கு ரூ.3கோடியே 12 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் கடைசி தரவரிசையில் இருந்த தமிழ்நாடு திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2021-ல் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி 3ம் இடமான-லீடர் விருதினை பெற்றது. ஒன்றிய அரசு வெளியிட்ட 2022ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் நிறுவனம் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சிறந்த செயற்பாட்டாளர் என்ற விருதினை பெற்றுள்ளது.
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் சிறந்த புத்தாக்க சூழல் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 2016ல் 1 பில்லியன் டாலராக இருந்த புத்தொழில்களின் மதிப்பீடு 2024ல் பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மதிப்பானது 66 சதவீதமாக உயர்ந்துள்ளது இது தேசிய அளவில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
