- தேவன்
- பாஜக
- குமாரி
- தளவாய்சுந்தரம்
- குமாரி கிழக்கு மாவட்டம்
- அஇஅதிமுக
- நாகர்கோவில்
- ஜெயலலிதா
- முன்னாள் அமைச்சர்
- மாவட்ட செயலாளர்
ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக குமரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசியதாவது: சட்டமன்ற தேர்தலில் சீட் அவருக்கா, இவருக்கா , தொகுதி யாருக்கு என்ற கற்பனை கோட்டை யாருக்கும் வேண்டாம். அவர் கெடுத்து விட்டார். இவர் கெடுத்து விட்டார் என நினைக்காதீர்கள்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை யாருக்கும் துரோகம் நினைக்காதவர். யாரையும் கெடுக்க நினைக்காதவர். நீங்களாகவே உங்களை கெடுத்து கொள்ளாமல் இருந்தால் போதும். தளவாய்சுந்தரம் இல்ல, யார் தடுத்தாலும் இறைவன் ஆசி இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் பாஜவினர் 4 தொகுதிகளை கேட்டு கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். இது மாறவும் செய்யலாம். இப்போது சீட் கிடைக்காதவர்களுக்கு வேறு வகையில் நிச்சயம் அவர்களுக்கான பொறுப்புகள் , வாய்ப்புகள் தேடி வரும்.
யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளரை தனியாக சந்தித்து தங்களது பயோடேட்டாவை கொடுக்கலாம். பேசலாம். எந்த தடையும் இல்லை. யாருக்கு சீட் கிடைத்தாலும் கட்சி உத்தரவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். இந்த மாவட்டத்துல எத்தனை ெதாகுதி என்பது முக்கியமல்ல. என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடியார் முதல்வராக வர வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றார்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 தொகுதிகள் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்டும், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்டும் வருகிறது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக, பா.ஜ. கூட்டணியில் மீண்டும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தான் களமிறங்குவார் என்பது உறுதியாகி உள்ளது. குளச்சலில் முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கே சீட் என பேசப்படுகிறது.
இந்த தொகுதிக்கு பா.ஜ.வும் குறி வைத்து உள்ளது. இதே போல் நாகர்கோவில் தொகுதியை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது மகள் கவுன்சிலர் ஸ்ரீலிஜாவுக்கு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதி பா.ஜ.விடம் உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதி தவிர, மீதி இருக்கிற பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகள் தற்போது திமுக கூட்டணி வசம் உள்ளது.
