×

தவெக சார்பில் சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு

சென்னை: தவெக சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில்,தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட வாரியாக ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ், நெடுஞ்செழியன், ஜெ.சி.டி.பிரபாகர், சத்தியபாமா உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இணைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள். குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை ஒருங்கிணைப்பார்கள்.

இந்த பணிகளைப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் உறுதுணையோடு ஒருங்கிணைக்க உள்ள மாவட்ட வாரியான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, இணை கண்காணிப்பாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தோழர்களும், அவர்களது பொறுப்பு மாவட்டங்கள் சார்ந்து, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Vetri Kalgam ,Vijay ,Chennai ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 89 அடியானது