சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக நேற்று அறிவித்தது. இந்த குழு கூட்டணி கட்சிகளுடன் இன்று மாலை முதல் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நடைபெற உள்ள 17வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவி உள்ளது. அதாவது ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தவெக தலைமையில் இன்னொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்து என 4 முனைப்போட்டி நிலவி இருக்கிறது.
4 முனை போட்டியிருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் போட்டி உருவாகியுள்ளது. 3வது மற்றும் 4வது இடத்துக்கு தவெகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டி போடுகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்க தயாராகி வருகிறது. திமுகவை பொறுத்தவரை அந்த கூட்டணி என்பது கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்கிறது. தொடர் வெற்றிகளையும் பெற்றுவருகிறது.
காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், தவாக, கொமதேக, தமிழக விடுதலைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணிக்கின்றன. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து மக்கள் நீதி மய்யம் நீடித்து வருகிறது. இதுதவிர கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி அதிரடியாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இப்படியொரு பிரமாண்ட அணியை திமுக இந்த தேர்தலில் அமைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 2019 தேர்தல் முதல் தொடர் வெற்றி, கருத்துக் கணிப்பு முடிவுகள் என உற்சாகத்துடன் திமுக வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நேற்று முன்தினம் முதல் விருப்ப மனுக்கள் பெறுதல் தொடங்கியுள்ளது. வருகிற 2ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
அதே நேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் திமுக இன்று முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. சிறிய கட்சிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமைக் கழகம் குழு அமைத்துள்ளது. குழு தலைவர்- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்கள் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் நடந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்ற டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு மீண்டும் இடம்பெற்றுள்ளனர். கடந்த முறை பேச்சுவார்த்தை குழுவில் இருந்த பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறவில்லை. மேலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவர்களுக்கு பதிலாக திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை குழுவில் புதிதாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொருளார் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழு தான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ்- 25 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட்-6, மார்க்சிஸ்ட்- 6, மதிமுக – 6, விசிக – 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3, கொமதேக-3, மமக-2, தமிழக வாழ்வுரிமை கட்சி-1, ஆதித்தமிழர் பேரவை-1, மக்கள் விடுதலைக் கட்சி-1, அகில இந்திய பார்வர்டு பிளாக்-1 இவ்வாறாக, கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. கொமதேக ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் கடந்த முறை இடம் பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் புதிதாக இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகளுடன் இன்று முதல் திமுக குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
திமுக குழுவுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தலைமையில் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர், பொருளாளர், எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முன்னாள் எம்பி எம்.அப்துல் ரஹ்மான், கே.நவாஸ் கனி எம்.பி. ஆகிய 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. கலைஞர் இருந்த போது சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியுடன் தான் பேச்சுவார்த்தையை தொடங்குவார். அந்த முறையை இப்போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
