×

மதுரையில் நேதாஜி, திருமங்கலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலங்கள் திறப்பு ரூ.1,805.28 கோடி திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கினார்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் ரூ.1805.28 கோடி மதிப்பிலான முடிவுள்ள திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தென்மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டம், மக்கள் நீதி மய்யம் நடத்திய நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் திமுக பாக முகவர்கள் மாநாடு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து வேன் மூலம் மதுரை வடபழஞ்சிக்கு காலை 11 மணியளவில் சென்ற முதல்வர், அங்குள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டிடம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இங்கு நடந்த நிகழ்ச்சியில், எல்காட் மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் இடையே ரூ.150 கோடியில் ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து பகல் 12.15 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து பகல் 12.30 மணியளவில் மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

பகல் 1 மணியளவில் மதுரை கே.கே.நகரில், ரூ.50 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவில் சிறிது தூரம் நடந்த சென்ற முதல்வர், கண்மாயை பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் இருந்தவாறே சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உருவச்சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

புது ஜெயில் ரோட்டில் முதல்வர் திறந்துவைத்த ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அங்கூரான் நவீன அறிவியல் மையத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதத்தில் பரிசோதனைகளுக்கான ஆய்வகங்கள், மின் மற்றும் இயந்திர மாதிரிகள், ரோபோக்களை உருவாக்குவதற்கான வசதிகள், கணினி பயிற்சி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா முடிந்து திரும்பிய முதல்வர், பொதுமக்களை சந்தித்து வணங்கியும், கை குலுக்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

ரூ.1805.28 கோடி மதிப்பிலான முடிவுள்ள திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில், பகல் 1.30 மணியளவில் அழகர்கோவில் ரோட்டிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து மாலையில் மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இரவு 7 மணியளவில் மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த ‘மறவோம்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார்.

இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் ெமாகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். மதுரையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு நேற்றிரவு மதுரை விமானநிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை சென்றார்.

* மு.க.ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ பாராட்டு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் பஸ் ஸ்டாப் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பணியை துவக்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘‘மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதும், பல திட்டங்களை துவக்கி வைப்பதும் மகிழ்ச்சியானது.

மதுரையில் நிறைவேற்றப்பட்டுள்ள பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தில் முழுமையாக அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். பந்தல்குடி கால்வாயில் துர்நாற்றம் வீசுவதால், தடுப்புச்சுவர் கட்டும்படி தெரிவித்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து உடனடி நடவடிக்கை எடுத்தார். இதனால் மதுரை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Netaji ,Veerapandia Kattabomman ,Madurai ,Tirumangalam ,Southern ,Zone ,DMK Agents' ,Meeting ,Makkal ,Needhi Maiam ,Madurai… ,
× RELATED ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு...