×

இலங்கை சிறைபிடித்த 22 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: ஒன்றிய அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 18ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதனை கண்டித்தும், மீனவர்களையும், படகுகளையும் ஒன்றிய அரசு மீட்டு தர வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று காலை விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் சகாயம் முன்னிலை வகித்தார்.

இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ், மீனவர் பிரதிநிதி எமரிட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

* தேர்தலில் பாஜவுக்கு பாடம் புகட்டுவோம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் பேசும்போது, ‘‘கடந்த 14 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் பிரச்னையில் மெத்தனப் போக்காக ஒன்றிய அரசு இருந்து வருகிறது.

மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு படகுகள் பறிமுதல் என்பது வாடிக்கையாக மாறி விட்டது. பெரும் முதலாளிகளுக்காக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தும் ஒன்றிய பாஜ அரசுக்கு, மீனவர்களின் பிரச்னை பெரிதாகத் தெரியவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் சேர்ந்து தகுந்த பாடம் புகட்டுவோம்’’ என்றனர்.

Tags : Rameswaram ,Sri Lanka ,Thangachimadam ,Union government ,Sri Lankan Navy ,Mandapam ,Thalaimannar court ,
× RELATED ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு...