×

பாக். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திருப்பூரில் 6 பேர் அதிரடி கைது: 8 செல்போன்கள், 16 சிம்கார்டுகள் பறிமுதல்: டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸ் அதிரடி

திருப்பூர்: நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து மத்திய உளவுப்பிரிவு போலீசார் மற்றும் அந்தந்த மாநில உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர். ஆய்வில் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது.

அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் அங்கு முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த மிஜானுர் ரகுமான் (33), முகம்மது சபாத் (34), உமர் (29), முகம்மது லிடான் (30), முகம்மது ஜாகித் (28), முகம்மது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது.

தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த டெல்லி போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லிக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனரா? வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரனை மேற்கொள்ள உள்ளனர்.

Tags : Pak ,Tirupur ,Delhi ,Q ,Central Intelligence Agency police ,
× RELATED ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு...