விளாத்திகுளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை மத்திய குழுவினர் ஆய்வு

விளாத்திகுளம், பிப். 5: எட்டயபுரம், விளாத்திகுளத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய விளைநிலங்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின. பயிர் சேதத்தை  பார்வையிட்டு அவற்றை மதிப்பிட இரு குழுக்களை நியமித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி முதல் மத்திய குழுவில் உள்ள மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி, ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வித்துக்கள்  மேம்பாட்டு இயக்குநர் மனோகரன், மத்திய நிதித்துறையின் செலவீனங்கள் பிரிவின் இணை இயக்குநர் மகேஷ்குமார், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குநர் ஜெகந்த்நாதன்  தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மார்க்கமாக காரில் பயணித்து எட்டயபுரம் தாலுகாவில் குமாரகிரி, புதூர், தலைகாட்டுபுரம், விளாத்திகுளம் தாலுகாவில் கமலாபுரம், ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் மழையால் சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள்  பாதிப்பை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து விளாத்திகுளம் பயணியர் விடுதியில் வேளாண், வருவாய், புள்ளியியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினர். ஆய்வின்போது கலெக்டர்  செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், தாசில்தார்கள் ஐயப்பன், ரகுபதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: