நாமகிரிப்பேட்டை, பிப்.21: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி அருகேயுள்ள நா.காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(69), விவசாயி. இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், மாட்டு கொட்டகையில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது, கொட்டகையில் கட்டி வைக்கப் பட்டிருந்த 10 மாடுகளில் 6 மாடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. கொட்டகையில் இருந்து மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, மாடுகள் தீயில் கருகியதைக் கண்டு சுப்ரமணி அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து, கொட்டகையில் இருந்த மற்ற மாடுகளை பத்திரமாக மீட்டு, வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஆயில்பட்டி கால்நடைத்துறை அலுவலர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மாடுகள் தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. மாடுகள் பலியானதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி சுப்ரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
