×

இந்தியா, சீனா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த கூடுதல் இறக்குமதி வரிசட்டவிரோதம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது இந்தியா, சீனா உள்பட உலக நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்போதுதான் 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி சிறப்பு அதிகாரம் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த கூடுதல் இறக்குமதி வரி யால் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிக்கும் என கூறியிருந்தார். ஆனால் டிரம்ப் விதித்த கூடுதல் வரி சட்டவிரோதம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வில் 6க்கு 3 என்ற கணக்கில் நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினார்கள். நீதிபதிகள் சாமுவேல் அலிட்டோ, கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோர் இந்த உத்தரவில் உடன்படவில்லை. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான்ராபர்ட்ஸ் தனது உத்தரவில்,’ அமெரிக்க அரசியலமைப்பு மிகத் தெளிவாக வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. ஆனால் டிரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு அதிகாரத்தின் எந்தப் பகுதியையும் சட்டமியற்றுபவர்கள் நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது’ என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 200% வரி விதிப்பதாக இந்தியாவை மிரட்டி போரை நிறுத்தினேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,’ 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ மோதலின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தேன். அப்போது அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் சண்டையை நிறுத்தாவிட்டால் 200 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டினேன். இந்த சண்டையின் போது 11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’ என்றார்.

* பாக்.பிரதமரை எழுந்து நிற்க சொன்ன டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கிய அமைதி வாரியத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்துள்ளன. இதன் அறிமுக விழாவில் மற்ற நாட்டு தலைவர்களுடன் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது தனது சமாதான திறன் குறித்து பேசிக்கொண்டு இருந்த டிரம்ப் திடீரென பாக்.பிரதமரை எழுந்து நிற்க சொன்னார். இதனால் அவர் தர்மசங்கடம் அடைந்தார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து டிரம்ப் பேசும்போது,’ பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒரே பக்கத்தில் இருப்பது ஒரு பெரிய விஷயம். அமைதி வாரியத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்ததற்கு மிக்க நன்றி. நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் உற்சாகமாக இருக்கிறார். அவர் இப்போது நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

Tags : Trump ,India ,China ,US Supreme Court ,Washington ,U.S. Supreme Court ,US ,
× RELATED பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது: தாலிபான் அரசு புதிய சட்டம்