லண்டன்: அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜெப்ரீ எப்ஸ்டீன் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மன்ஹாட்டன் சிறையில் இருந்த அவர் 2019ல் உயிரிழந்தார். அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. அதில் பல நாடுகளின் தலைவர்கள் எப்ஸ்டீனுடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள், இமெயில்கள் வெளியாகியது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் தம்பியும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூவுக்கு அரண்மனையில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியது. இது பிரிட்டனில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தக தூதராக இருந்த போது எப்ஸ்டீனிடம் அரசின் ரகசிய ஆவணங்களை ஆண்ட்ரூ வழங்கியதாக போலீசார் சந்தேகம் எழுப்பியிருந்தனர். எப்ஸ்டீன் விவகாரத்தில் புதிய ஆதாரங்கள் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் நார்போல்க்கில் உள்ள ஒரு மாளிகையில் ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். ஆண்ட்ரூவிடம் போலீசார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, ஆண்ட்ரூ முன்னர் யார்க் நகரின் பிரபு ஆக பதவி வகித்த போது வசித்து வந்த அரச குடும்பத்தின் விண்ட்சர் கேஸில் மாளிகையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
