பாகூர், பிப். 21: புதுச்சேரி பாகூரில் காகங்கள் இறந்த நிலையில், கோழிகளும் அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவத்தால் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. ஆய்வுக்கு பிறகு எச்5 என்1 வைரஸ் தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டு, இந்த காகங்கள் அனைத்தும் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி பாகூரில் உள்ள மருத்துவமனை வளாகம், அங்குள்ள கோயில் வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 காகங்கள் இறந்து கிடந்தன. அதனை கண்ட பொதுமக்கள், ஒரே நேரத்தில் காக்கைகள் ஏன் இறந்துள்ளன? என சந்தேகம் அடைந்தனர். கடந்த ஒரு வாரமாக பாகூர் பகுதியில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துள்ளது தெரியவந்தது. தகவலறிந்த புதுச்சேரி கால்நடைத்துறை இணை இயக்குநர் மரியா தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர், பாகூர் பகுதிக்கு பாதுகாப்பு கவச உடையுடன் சென்றனர். அங்கு இறந்து கிடந்த காகங்களை சேகரித்து, மத்திய பிரதேசம் வோபாலில் உள்ள தேசிய பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவு இதுவரை வரவில்லை.
பாகூரில் காகங்கள் இருந்து கிடந்த சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது. நேற்றும், பாகூர் மருத்துவமனை அருகில் உள்ள தண்ணீர் தொட்டி எதிரில் காகம் ஒன்று மயங்கிய நிலையில் தள்ளாடி நிலையில் இருந்தது. காகங்கள் இறப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கமராஜர் நகரில் உள்ள இளங்கோ என்பவரின் வீட்டில் 3 கோழிகள் அடுத்தடுத்து இறந்ததாக தெரிகிறது. அதேபோன்று பாகூர் கன்னியகோவில் ரோட்டில் உள்ள சிவா என்பவரின் வீட்டிலும் 5 கோழிகள் இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகூர் பாரம்பரிய பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், பாகூர் கால்நடைத்துறை மருத்துவ அதிகாரிக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
