×

பச்சை நிறமே பச்சை நிறமே..!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

தட்டின் ஓரத்தில் மிளகாய், கறிவேப்பிலை போலவே, காலிஃப்ளவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த பச்சை நிறக் காயை ஒதுக்கும் குழந்தைகளோடு போராடும் அம்மாக்களுக்காக, உலகிலேயே அதிகமான சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலி குறித்த சிறப்புப் பதிவு இது.‘பச்சை நிறமே பச்சை நிறமே’ என அடர்பச்சை நிறத்தில் காணப்படும் ப்ரோக்கோலியின்(Broccoli) தாவரப்பெயர் Brassica oleracea. தோன்றிய இடம் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி. Broccalo என்ற இத்தாலிய வார்த்தைக்கு, முளைக்கட்டிய முட்டைக்கோஸ் என்பது பொருளாக சொல்லப்படுகிறது.

காடுகளில் வளர்ந்த முட்டைக்கோஸின்(Wild cabbage) மரபு மாற்றத்தால் தோன்றிய மனிதக் கண்டுபிடிப்பான இதனை, இத்தாலியின் பழமை மிகுந்த எட்ரூஸ்கன் நாகரிகத்தினர் (தற்போது டஸ்கனி) தமது தோட்டக்கலைத் திறமையால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தாவரமே ப்ரோக்கோலி. அதனாலேயே இத்தாலிய அஸ்பாரகஸ்(Italian Asparagus) என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ் வகையைச் சார்ந்த ப்ரோக்கோலியை, பச்சைப் பூக்கோஸு என நாமும், பிற மாநிலங்களில் ஹரி-ஃபூல் கோபி, க்ரீன் கோபி, கோஸு கெட்டே என்றும் அழைக்கின்றனர் என்றாலும், அனைத்து இடங்களிலும் ப்ரோக்கோலி என்பதே இதன் பொதுவானப் பெயர்.அழகிய வடிவம் கொண்ட ப்ரோக்கோலி, அடர் பச்சை நிறத்தில் மட்டுமன்றி ஊதா நிறத்திலும் பொன்னிறத்திலும் காணப்படுகிறது. முதிர்ந்த ப்ராக்கோலி மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்பட்டாலும், இளம் ப்ரோக்கோலியின் சிறிய பூக்கள், தண்டுகள் மற்றும் இலைகளே உணவாய் பயன்படுகின்றது. மிகக் குறைந்த அளவு கலோரிகள் கொண்ட ப்ரோக்கோலி, மிக அதிக அளவிலான சத்துகளை தருகிறது என்பதாலேயே ‘க்ரீன் பவர் ஹவுஸ் என்றும் ‘Powerhouse of Nutrition’ என்றும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

விதைகள் மூலம் பயிரிடப்படும் கோஸ் வகையான இந்தக் காய்கள், மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குளிர் நிலையிலும் வளரக்கூடியவை. நான்கைந்து மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகும் ப்ரோக்கோலியின் முளைப் பயிர்கள் (Broccoli sprouts) மற்றும் அவற்றின் சத்துகள் காரணமாக தற்போது அதிகம் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் உணவில் பயன்படுத்தப்படும் ப்ராக்கோலியின் முதல் நிலை உற்பத்தி நாடுகள் சீனா மற்றும் இந்தியா என்பது கூடுதல் தகவல். நமது நாட்டில் புனே, நாசிக், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், நீலகிரி போன்ற குளிர் பிரதேசங்களில் பெருமளவு விளைவிக்கப்படுவதுடன் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அதிக நார்ச்சத்தும்(2.4 கிராம்), அதிக நீர்த்தன்மையும் (86%) நிறைந்த இந்த பச்சைப்பூவில் 5.59% மாவுச்சத்து, 4.9% புரதச்சத்து மற்றும் 0.3% கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளதால் குறைந்த கலோரிகளை இது தருகிறது. அதேசமயம் C, B, A, E, K உள்ளிட்ட வைட்டமின்களும், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், குரோமியம், சோடியம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச்சத்துகளும் நிறைந்துள்ளன என்பதுடன், இந்தச் சத்துகள் அனைத்தும் நமது அன்றாட வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் தேவையை கிட்டத்தட்ட 90% பூர்த்தி செய்துவிடுகின்றன என்பது இதன் சிறப்பு.

ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்களான ஃப்ளாவனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், ஜியா-ஜாந்தின், கோலின், பீட்டா-கரோட்டீன், க்வர்செட்டின் ஆகிய தாவரச்சத்துகள், நமது ஆரோக்கியத்தைப் பெருமளவு கூட்டுகின்றன என்றால், அவற்றிற்கெல்லாம் மணிமகுடமாகத் திகழ்கிறது ப்ரோக்கோலியில் நிறைந்து காணப்படும் சல்ஃபோரஃபேன் (Sulforaphane) சத்து.

ஆம். ப்ரோக்கோலியின் லேசான கசப்பிற்கு காரணமான இந்த சல்ஃபோரஃபேன், உடலின் நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றி, கசப்பான பல நோய்களை, குறிப்பாக புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. புற்றுச் செல்களின் அதீத வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்க உதவும் ஆற்றலைக் கொண்ட இந்த சல்ஃபோரஃபேன் மற்றும் அதன் வினை வேதிப்பொருளான இண்டோல் 3 கார்பினோல், உடலின் நுரையீரல், உணவுக்குழாய், தோல், கணையம், மார்பகம், கருப்பை, பிராஸ்டேட் ஆகியவற்றில் தோன்றும் புற்றுநோயைத் தடுக்கவல்லது என ஆய்வுகள் கூறுகின்றன.

புற்றுநோய் எதிர்ப்புத் தவிர இன்னும் பல அற்புத மருத்துவக் குணங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. உடற்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய், கல்லீரல் நோய்கள், செரிமானமின்மை, குடல் அழற்சி, எலும்புப்புரை, மூட்டு நோய்கள், கண்புரை, தோல் அழற்சி ஆகியவற்றையும், வயோதிகம் சார்ந்த கண் சிதைவு நோய்களையும், மூளைத்தேய்வு நோய்களையும் தடுக்க உதவுகிறது.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மற்றும், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதால், ஹார்மோன் சார்ந்த பாதிப்புகளையும் ஹார்மோன் சார்ந்த புற்றுநோயையும் குணப்படுத்தவும் உதவுகிறது. இத்துடன் நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கூட்டுவதால், உலகிலேயே அதிகமான சத்துக்கள் நிறைந்த ஒன்றாய் ப்ரோக்கோலி பார்க்கப்படுகிறது.

ப்ரோக்கோலியை பச்சையாகவும், சமைத்தும் சாலட், சூப், காய், ஃப்ரை போன்ற உணவுகளாகவும், பாஸ்தா, சப்பாத்தி, பிரியாணி ஆகியவற்றில் இணை உணவாகவும் உட்கொள்ளலாம். இதனை முழுமையாய் சமைப்பது அல்லது எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், நீரில் மிதமாக வேக வைத்தோ அல்லது ஆவியில் வேக வைத்தோ அல்லது மைக்ரோவேவ் அவனில் சமைத்தோ உட்கொள்ள, இதன் சத்துகள் குறிப்பாக, வைட்டமின்கள் மற்றும் சல்ஃபோரஃபேன் குறையாமலிருக்கும் என்று உணவு ஊட்ட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். முடிந்தவரை குளிர் சாதனப் பெட்டியில் வைப்பதுடன், வாங்கிய 4-5 நாட்களுக்குள் பயன்படுத்துவது இதன் முக்கியச் சத்துக்களை இழக்காமல் பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கின்றனர்.

வரலாற்றின் பக்கங்களில், ரோமானிய மன்னரான டைபீரியஸின் மகன், ப்ரோக்கோலியின் சுவை காரணமாக, தட்டின் ஓரம் ஒதுக்கி வைக்காமல் வாழ்நாள் முழுவதும் உட்கொண்டதாகத் தகவல்கள் உள்ளன. வழக்கம் போலவே, அதிக அளவில் இதனை உட்கொண்டால், கந்தகச் சத்து காரணமாய் வயிற்று உப்புசம், ஒவ்வாமை ஏற்படும். மேலும் IBS, தைராய்டு பிரச்னைகளிலும், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளும் போதும் அளவாக உணவில் சேர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ப்ரோக்கோ-ப்ளவர் என்பது ப்ரோக்கோலி மற்றும் காலிஃப்ளவர் இணைந்த மரபுத் தாவரம். ப்ரோக்கோலி மற்றும் சீன கேல் தாவரங்களை இணைத்து, ப்ரோக்கோலினி(Broccolini) எனும் தாவரத்தை உருவாக்கியுள்ளது ஜப்பானிய சகட்டா நிறுவனம், இந்த புதிய தாவரம் ஆரோக்கியத்தை இன்னும் அதிகரிக்க உதவும் என்கிறது இந்நிறுவனம்.

நண்டின் கால்கள் மணலைப் பறித்துக் கொண்டு போவதைப்போல நாலாபக்கமும் பரவும் தன்மை கொண்ட கொடிய நோயான புற்றுநோயைத் தவிர்க்க, இயற்கை அளித்த இந்த பச்சை நிற
ப்ரோக்கோலியோடு உலகப் புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 ஆம் தேதியை கொண்டாடுவோம்.!

(இயற்கைப் பயணம் நீளும்!)

Tags :
× RELATED 40 ப்ளஸ் கண் பரிசோதனைகள் அவசியம்!