×

ரெஜினா கசாண்ட்ரா ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

திரையுலகிற்கு வந்த நாள் முதல் இன்றுவரை வசீகரமான தோற்றத்துடன் வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. பஞ்சாமிர்தம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து மாநகரம், கதகளி, சரவணன் இருக்க பயம் ஏன், மூக்குத்தி அம்மன், விடாமுயற்சி, பார்டர் சமீபத்தில், கள்ளபார்ட், சூர்ப்பனகை போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அடுத்ததாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரெஜினாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: நான் ஒரு ஃபிட்னெஸ் பிரீக் என்று சொல்லலாம். தினசரி ஜிம் சென்று பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.

எனது பயிற்சி முறைகள் தினசரி ஒரே மாதிரியாக இல்லாமல், சற்று வித்தியாசமாக சுழற்சி முறையில் அமைத்துள்ளேன். அந்தவகையில் ஒரு நாள் உடலின் மேல் பகுதியை வலுப்படுத்த உதவும் பயிற்சிகளை செய்தால் மறுநாள் உடலின் கீழ் பகுதியில் கவனம் செலுத்துவேன். எந்த வேலை இருந்தாலும் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகளுக்கு செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். இது தவிர, நடைப்பயிற்சி, ஓட்டம் போன்ற பயிற்சிகளும் உண்டு. தினசரி காலை நேரத்தில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் வாக்கிங், ஜாகிங் எல்லாம் செய்து வருகிறேன்.

எப்படி உடற்பயிற்சியை எனது தினசரிகளில் ஒன்றாக வைத்துள்ளேனோ அதுபோன்றே யோகாவையும் என்னையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். எனது உடல் நளினத்திற்கு யோகா முக்கிய காரணம் ஆகும். சூரிய நமஸ்காரத்தில் தொடங்கி புஜங்காசனம், சர்வாங்காசனம் வரை உடலை வலிமையாக வைத்திருக்கும் யோகாசனங்களை தொடர்ந்து செய்துவருகிறேன்.

டயட்: உணவில் பெரிய கட்டுப்பாடுகள் எல்லாம் வைத்திருப்பதில்லை. எனக்கு பிடித்ததை உண்கிறேன் அவ்வளவுதான். அதுபோன்று அவ்வப்போது தண்ணீர் குடிக்கும் பழக்கமும் என்னிடம் உள்ளது. இது சருமத்தை வறண்டு போகாமல் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிட வாரம் ஒரு முறை ஒரு நாள் முழுவதும் பழச்சாறு மட்டுமே அருந்துவேன்.

அந்த நாளில் மற்ற உணவு எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். அதே போல இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெறும் வயிற்றில் தோல் நீக்கி சுத்தப்படுத்திய கற்றாழை ஜெல்லை சாப்பிடுவேன். இது எனது சரும ஆரோக்கியத்திற்கும். சரும பளபளப்புக்கும் மிகவும் உதவுகிறது. அதுபோன்று எனது தினசரி உணவில் தினமும் 100 கிராம் அளவு புரதச்சத்து கொண்ட உணவு கட்டாயம் இருக்கும்.

மற்றபடி, காலையில் மசாலா டீ அல்லது ஏலக்காய் டீ அல்லது பழச்சாறு என ஒவ்வொரு நாளும் ஒருவகை அருந்துவேன். இது தவிர காலை உணவாக இட்லி, தோசை, சாம்பார் என தினசரி நார்மலான டிபன் எடுத்துக் கொள்வேன். பின்னர், 11 மணியளவில் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வேன். அல்லது முளை கட்டிய பயறு வகைகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வேன்.

அடுத்ததாக மதிய உணவில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வேன். மேலும், பீன்ஸ், கேரட் போன்ற வேக வைத்த காய்கறிகள் கட்டாயம் இருக்கும். அதிக எண்ணெயில் பொரித்த உணவுகளை பெரும்பாலும் நான் விரும்புவதில்லை. மேலும், இரவில் பெரும்பாலும் எளிமையான உணவுகளுடன் முடித்துவிடுவேன்.

பியூட்டி: பொதுவாக எனக்கு நிறைய மேக்கப் போடுவது பிடிக்காது. திரைப்படத்திற்காக மேக்கப் போட்டுக் கொள்வதோடு சரி. வீட்டில் இருக்கும்போது மேக்கப் எல்லாம் போடுவது கிடையாது. ஒரு லிப் பாம் மற்றும் காஜல் அவ்வளவுதான் போட்டுக்கொள்வேன். தலைமுடி பராமரிப்புக்கு விட்டமின் ஈ எண்ணெய் எடுத்துக்கொள்வேன். இது தவிர, வீட்டிலேயே சில மூலிகைகள் சேர்த்து எண்ணெய் தயாரித்து வைத்துக்கொண்டு அதைத்தான் தடவிக்கொள்வேன். மற்றபடி எனது டெர்மடாலஜிஸ்ட் என்ன சொல்கிறாரோ அதைத்தான் எனது சரும பராமரிப்புக்கு பயன்படுத்துகிறேன். இதுதான் எனது தினசரி ஃபிட்னெஸ் ரகசியங்கள்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Tags : Regina Cassandra ,Thanksgiving ,Managaram ,Kadakali ,Saravanan ,Nokuthi Amman ,
× RELATED பாத பராமரிப்பு!