×

சுகப்பிரசவமும் முதுகு வலியும்!

நன்றி குங்குமம் தோழி

அனைத்து கர்ப்பிணிகளும் கடந்து வரும் ஒரு வாக்கியம், ‘சுகப்பிரசவம் ஆகிவிட்டால் போதும்… மற்ற எந்தப் பிரச்னையும் வராது.’ ஆனால், உண்மையில் சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கும் முதுகு வலி வரும் என்பது அனுபவித்தவர்களும், அனுபவிப்பவர்களும், அதை நேரில் கண்டவர்களும், கேட்டவர்களும் மட்டுமே அறிவார்கள்.ஏன் அவ்வாறு முதுகு வலி வருகிறது? அதற்கு என்ன காரணம்? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது என்பது அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்வோம்.

சுகப்பிரசவம் சார்ந்த மூடநம்பிக்கைகள்…

சுகப்பிரசவம் ஆன அடுத்த அரை மணி நேரத்திலேயே நாம் எழுந்து உட்கார்ந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றாலும், அதிலும் பாதகங்கள் உள்ளன. சுகப்பிரசவம் ஆன உடனே மொத்த உடலும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது ஒரு வகையான மூடநம்பிக்கை.தசைகள் இயல்பு நிலைக்கு திரும்புவது உடற்பயிற்சிகளால் மட்டும்தான். கரு பெரிதாகப் பெரிதாக தாயின் வயிறு விரிந்து கொடுக்கும். இதில் வயிற்று தசைகள் பலவீனமாகும். மேலும், வயிற்றின் எடை தாங்காமல் நாம் முன்நோக்கி வயிற்றைத் தள்ளி நடப்பதால் முதுகு தசைகள் இறுக்கமாக(Muscle tightness) மாறும்.

முதுகு வலிக்கான காரணங்கள்…

*தசைகள் சமச்சீராக இல்லாமல் இருப்பது.

*கர்ப்பிணியாக இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் விரிந்து கொடுக்கும். இதனால் தசைகளின் பலம் குறைந்து போகும்.

*குழந்தை பிறந்த பின்பு அதீத ஓய்வு எடுப்பதும், எந்த வேலையும் செய்யாமல் இருப்பதும், மேலும், தசைகளை சமச்சீராக வைத்திருப்பதால் நம் வாழ்க்கை முறையும் முதுகு வலிக்கு காரணமாக அமைகிறது.

தடுக்கும் வழிகள்…

கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்தே உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும். அதேபோல, குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழித்து உடற்பயிற்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும். கூடவே, குழந்தை பிறந்த பின்பான வாழ்க்கை முறையில் அதிக ஓய்வு எடுக்காமல் சுறுசுறுப்பாகவும், எளிய வேலைகளை செய்வதும் மிக முக்கியம்.

இயன்முறை மருத்துவத்தின் பயன்…

கர்ப்பமாக இருக்கும்போது அல்லது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழித்து அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகி போதுமான உடல் பரிசோதனைகளை செய்து உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரின் உடல் பலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப உடற்பயிற்சிகள் மாறுபடும் என்பதால், அதனை தகுந்த முறையில் பரிசோதனை செய்து பரிந்துரைத்து கற்றும் தருவர். கூடவே, உடல் எடையை குறைக்கத் தேவையான உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுப்பார்.

செய்ய வேண்டியவை…

*பிரசவம் ஆன புதிதில் எளிமையான உடற்பயிற்சிகள்தான் பரிந்துரைப்பார்கள் என்பதால், அவ்வப்போது அடுத்தக்கட்ட உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்வது அவசியம்.

*குழந்தை பிறந்த பின்பு தலையணை இல்லாமல் உறங்க வேண்டும். இதனால் முதுகுத் தண்டுவடம் இயல்பு நிலைக்கு வரும்.

*குழந்தை பிறந்த பிறகும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் அவசியம் நாம் இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை…

*யூடியூப் போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்வது தவறு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடற்பயிற்சிகள் தேவைப்படும். எனவே, இவ்வாறு செய்வதால் ஆரோக்கியத்திற்கு தீமைகள் விளையும்.

*அதீத ஓய்வு எடுக்காமல் அவ்வப்போது எளிமையான வேலைகள் செய்யவும், நடக்கவும் வேண்டும். சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி மீது ஆவல் இருக்கும் என்பதால், விரைவாகவே அதிக எடைகளை தூக்கவும், அதிக உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவும் முயற்சி செய்வர். இதுவும் முற்றிலும் தவறு. படிப்படியாக செல்வதும், செய்வதும்தான் எப்போதும் சிறந்தது.

அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். அது என்ன என்பதை தக்க முறையில் அறிந்து, அதனை எவ்வகையில் பயன்படுத்தி நம் உடலினை ஆரோக்கியமாக வைக்கலாம் என்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பம் முதலே உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல பிரச்னைகளை எதிர்காலத்தில் தடுக்கலாம் என்பதால், உடற்பயிற்சிகளில் நேரம் செலுத்தி ஆரோக்கியமான எதிர்காலத்தை வாழ்வோம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags : Kumkum ,
× RELATED 40 ப்ளஸ் கண் பரிசோதனைகள் அவசியம்!