நன்றி குங்குமம் டாக்டர்
செயற்கை நுண்ணறிவு Ai நிகழ்த்தும் மாயம்!
நவீன விஞ்ஞானம் மானுட குலத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடை செயற்கை நுண்ணறிவு. இன்று நவீன மனிதன் விவசாயம் முதல் மருத்துவம் வரை சகலவற்றிலும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தரமான வாழ்வை வாழ்ந்துவருகிறான். மருத்துவம் போன்ற நுட்பமும் சிக்கலுமான துறைகளில் மனிதன் வேலை செய்கிற போது நிகழும் துல்லியமான விளைவுகளைவிட துல்லியமானதாகவும் குறைந்தபட்ச சேதாரங்களைவிட குறைவானதாகவும் விளைவுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியப் பங்குவகிக்கிறது.
இன்று நவீன மருத்துவம் நோயறிதல் எனப்படும் Diagnosis முதல் அறுவைசிகிச்சை வரை பல முக்கியமான மருத்துவ சேவைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அற்புதமான விளைவுகளை உருவாக்கி வருகிறது. அதில் ஒன்றுதான் விபத்துக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் செயற்கை நுண்ணறிவு. இது விபத்தில் உருவாகும் காயங்களுக்கு மிகச் சிறப்பான மருத்துவத்தைத் தருகிறது.
பக்கவாதம் (Stroke) மற்றும் விபத்தினால் ஏற்படும் மூளைக் காயங்களை (Traumatic brain injury) திறம்பட கையாள்வதில் ‘நேரம்’ தான் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும், சரிசெய்ய முடியாத மூளை பாதிப்பு, நீண்டகால ஊனம் அல்லது உயிரிழப்புக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், இந்தியா முழுவதும், குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், நரம்பியல் நிபுணர்கள் (Neurologists), கதிரியக்க நிபுணர்கள் (Radiologists) மற்றும் உயர்தர சிகிச்சை வசதிகள் சரியான நேரத்தில் கிடைப்பது என்பது இன்றும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறிய நகரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பது அரிதாகவே உள்ளது. தலைக்காயத்துடனோ அல்லது பக்கவாத அறிகுறிகளுடனோ அழைத்துவரப்படும் நோயாளிகள் பெரும்பாலும் ஒரு மருத்துவமனையிலிருந்து மருத்துவ வசதிகள் கொண்ட வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்.
ஸ்கேன் எடுப்பதற்கும் அதன் முடிவுகளைப் பெறுவதற்கும் பல்வேறுவிதமான தாமதங்கள் ஏற்படுகின்றன. இறுதியாக, பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்காக தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட தூரம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால் நேரம் விரயமாகின்றது. இந்த மருத்துவ வசதிகளுக்கான கட்டமைப்பு ரீதியான இடைவெளிகள், சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான அந்த பொன்னான நேரத்தை வீணடிக்க செய்கின்றன.
ஒரு மருத்துவத் துணையாக முக்கியத்துவம் பெறும் செயற்கை நுண்ணறிவு மருத்துவ வசதிகளைப் பெறுவதில் நிலவும் இந்த இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த மருத்துவத் துணையாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence -AI) உருவெடுத்து வருகிறது. அவசரகால நரம்பியல் இமேஜிங்கில் [neuroimaging], குறிப்பாக ‘நான்-கான்ட்ராஸ்ட் ஹெட் சிடி’ (Non-Contrast Head CT) ஸ்கேன்களில், மூளைக்குள் ஏற்படும் ரத்தப்போக்கு (Intracranial hemorrhage), எலும்பு முறிவுகள் [fractures], மாஸ் எஃபெக்ட் [mass effect] மற்றும் மூளை இடப்பெயர்வு (Midline shift) போன்ற ஆபத்தான பாதிப்புகளை மிகத்துரிதமாக கண்டறிந்து மருத்து பரிசோதனைகளின் முடிவுகளை உடனடியாக பெறுவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு [AI] தொழில்நுட்பம் கொண்ட ஹெட் சிடி ஸ்கேன் மூலம் பகுப்பாய்வு செய்யும் முறைகள், ஒரு ஸ்கேனை சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. இவை அதிக ஆபத்துள்ள பாதிப்புகளை மிக விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆரம்பக்கட்ட தகவல்களை உடனடியாக வழங்குகின்றன. இதன் மூலம், நிபுணர்களின் வருகைக்காகவோ அல்லது விரிவான மருத்துவ அறிக்கைக்காகவோ காத்திருக்காமல், மருத்துவக் குழுவினர் உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்க முடிகிறது. அதிலும் குறிப்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பணியில் அதிகம் இல்லாத இரவு நேரங்களில் இது பெரும் உதவியாக இருக்கிறது.
நோயாளி பராமரிப்பில் நிரூபிக்கப்பட்டிருக்கும் நேர்மறையான தாக்கம் நம்முடைய அன்றாட மருத்துவச் சூழல்களில், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவப்பணிகள் குறிப்பிட்டு செல்லும் அளவில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இப்போது ஆயிரக்கணக்கான சிடி ஸ்கேன்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் மிக விரைவாக பரிசோதிக்கப்படுகின்றன. அவற்றில் ‘ஆபத்தானது’ என குறிப்பிடத்தக்க பகுதி உடனடியாக கண்டறியப்படுவதால் சிகிச்சைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. மையப்படுத்தப்பட்ட ‘டெலி-ஸ்ட்ரோக்’ (Centralised tele-stroke teams) குழுக்களும், மருத்துவர்களுடனான நேரடி கலந்தாலோசனைகளும், பரிசோதனையில் கண்டறியப்படும் பாதிப்புகளுக்கு உடனடிச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மூலமான இந்த நன்மைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இப்பகுதிகளில் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து சிகிச்சை தொடங்குவதற்கு இடையில் இருக்கும் கால அவகாசத்தை 30-70% குறைக்க செயற்கை நுண்ணறிவு உதவியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு சிகிச்சை அளிப்பதில் உண்டாகும் தாமதம் சுமார் 2.5 முதல் 5.5 மணிநேரம் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மிதமான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, விபத்தில் காயம்பட்ட நோயாளிகளுக்கு அந்தந்த இடங்களிலேயே சிகிச்சை அளிக்க முடிகிறது. இது உயிருக்கு ஆபத்தான மற்றும் அதிக நேரமெடுக்கும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்க உதவுகிறது.
எதிர்காலப் பாதை
செயற்கை நுண்ணறிவு [AI] என்பது மருத்துவர்களின் அறிவுக்கு மாற்றானது அல்ல. மாறாக, அது மருத்துவர்களின் திறனை மேம்படுத்தும் ஒரு கருவியாகும். இது மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு, இக்கட்டான சூழல்களில் விரைவாகவும் நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்க மருத்துவர்களுக்கு உதவும் ஒரு சக்தியாக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டு மருத்துவ நடைமுறைகளில் ஒருங்கிணைக்கப்படும்போது, காலத்தை விரயப்படுத்தாமல் உடனடியாக பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நரம்பியல் அவசர சிகிச்சைகளில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
பெருநகரங்களைத் தாண்டி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் இத்தருணத்தில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த இமேஜிங் போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். பக்கவாதம் மற்றும் விபத்து சிகிச்சையில் அதன் சூத்திரம் மிகவும் எளிமையானது: எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக பாதிப்பைக் கண்டறிகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாகச் சிகிச்சையைத் தொடங்கலாம்; எவ்வளவு விரைவாகச் சிகிச்சை தொடங்குகிறதோ, அந்தளவுக்கு மனித உயிர்களையும், மூளைகளையும் நம்மால் காப்பாற்ற முடியும்.
தொகுப்பு: டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன்
