பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் – வீடு வீடாக பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 13ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் – வீடு வீடாகப் பரப்புரை’ நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ – ‘விடியல் பயணம்’ – ‘தோழி விடுதிகள்’ – ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது.

நமது சாதனை திட்டங்களால் பெண்கள் – வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர். பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் ‘திராவிட மாடல் அரசு’ நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் – ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இந்த பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த பரப்புரையை, வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்ட செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும். ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புபுரைக்கான சட்டமன்ற தொகுதி வாரியான பயிற்சி கூட்டத்தை வரும் பிப்ரவரி 20, 21 மற்றும் 22ம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும்.

இப்பயிற்சியை, சட்டமன்ற தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சி கூட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன்பிறகு அவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையை தொடங்கிட வேண்டும்.

கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க கழகத்தின் வெற்றியை உறுதி செய்து மீண்டும் தி.மு.கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என இந்த பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள் – பொறுப்பு அமைச்சர்கள் – மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: