×

எனக்கு வயசாகிடுச்சா? சசிகலா அதிரடி மூவ் கலக்கத்தில் எடப்பாடி: ஓபிஎஸ், ராமதாசுடன் கூட்டணி?

அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது தோழி சசிகலாவை அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ததுடன், பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்தனர். தற்போதைய பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மேல்மட்ட நிர்வாகிகளும், பொதுச்செயலாளராக நீங்களே இருக்க வேண்டும் என்று சசிகலாவிடம் கைகட்டி கெஞ்சினர். இதனை ஏற்றுக்கொண்ட சசிகலா, முதல்வர் கனவில் இருந்த நிலையில், தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர், தமிழகம் வராமல் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டார்.

இந்த சூழ்நிலையில் உடனடியாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததுடன், பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஜெயிலுக்கு சென்றார் சசிகலா. தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்பி வரும்போது, அவர் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த பழைய கதை தான். அவருக்கு ஆதரவாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் யாரும் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர். சசிகலாவோ எப்படியாவது அதிமுகவில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, சசிகலாவை கட்சிக்குள் விட்டால் தன்னை காலி செய்துவிட்டு, கட்சியை கைப்பற்றிவிடுவார் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதே நேரத்தில் சசிகலா தனிக்கட்சியை தொடங்க மாட்டார், அதிமுகவுக்கு எதிராக செயல்பட மாட்டார் என்றும் நினைத்திருந்தார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சசிகலா தனிக்கட்சி தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் சேர்ப்பதாக கடைசி வரைக்கும் நம்ப வைத்துவிட்டு, டிடிவியை மட்டும் சேர்த்துவிட்டு தன்னை பாஜ ஒதுக்கியதாக சசிகலா அதிருப்தியில் உள்ளார். அதிமுகவில் கடைசி வரைக்கும் இடமில்லை என எடப்பாடி கூறிவிட்டதால் அவர் மீதும் கடும் ஆத்திரத்தில் உள்ளார். இதேபோல், தன்னை சந்தித்த அமமுக நிர்வாகியை டிடிவி.தினகரன் அமமுகவில் இருந்து நீக்கியதால் அவர் மீதும் கோபத்தில் உள்ளார். இவர்கள் அனைவருக்கும் பாடம் புகட்டவே சசிகலா கட்சியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா திடீரென பொங்குவதற்கு காரணம் என்ன? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சசிகலாவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘அதிமுகவுக்கு எதிராக சசிகலா எதையும் செய்யமாட்டார் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவைத்தலைவர் பதவி தருவதாக கூறினார். ஆனால் சசிகலா, பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்றார். இதுதொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டே சென்று தேர்தல் வரை போய், இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என கூறி கைவிரித்து விடும் திட்டத்தில் இருந்தார் எடப்பாடி. இதனை தெரிந்து கொண்ட சசிகலா, இனிமேலும் பொறுமை காக்க முடியாது என்பதால் தற்போது தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். இதன்மூலம் 50 தொகுதிகளில் போட்டியிட்டு, எடப்பாடி பழனிசாமியை தோல்வியடைய செய்வதை இலக்காக மாற்றியுள்ளார்.

வயதாகி விட்டது, இனிமேல் இவரால் என்ன செய்ய முடியும் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடத்தை காண்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்தமுறை கட்சி தோற்றாலும் பரவாயில்லை என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. அடுத்த தேர்தலில் எல்லோரையும் ஒருங்கிணைத்து விடலாம் என நினைக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று நல்ல முடிவை எடுப்பார். தற்போது சசிகலாவை அமமுகவினர் சாரை சாரையாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதோடு நடிகர் விஜய், ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ் பாமக ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்றார். சசிகலாவின் அதிரடி நடவடிக்கையை அறிந்து கடந்த 10 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மிகவும் அமைதியாகி விட்டார். எந்த நிர்வாகிகளிடமும் மனம் விட்டு பேசுவதில்லை. இதனால் அதிமுகவினரும் கலக்கமடைந்துள்ளனர்.

* ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ இபிஎஸ்சுடன் திடீர் சந்திப்பு
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக, கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் என வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி அணி), டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேநேரம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அங்கு எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின்போது, அரசியல் மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமதாஸ் தரப்பு பாமக இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

* வாளி…வாளின்னு வரும் எம்எல்ஏ
அதிமுக மாஜி அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், தனது திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை அடிக்கடி அழைத்து, டி.குன்னத்தூரிலுள்ள ஜெயலலிதா கோயிலில் கூட்டம் போடுகிறார். யாரும் ஆப்சென்ட் ஆகக்கூடாதுன்னு கண்டிஷன் வேற போடுறாராம்… கூட்டம் முடிந்ததும் வேட்டி, சேலை கொடுத்து சிரித்த முகத்துடன் அனுப்பி வைக்கிறாராம். வாரத்திற்கு இரண்டு நாள் கூட்டம் போடுகிறார், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சோழவந்தான், செக்காணூரணி போன்ற மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளில் இருந்து இதற்காக ஆட்களை திரட்டி வர வாடகை வாகன ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பல ஆயிரம் செலவாகிறது.

ஆனால், கூட்டம் முடிந்து போகும்போது சிம்பிளாக வேட்டி, சேலையை கொடுத்து அனுப்புகிறார். 100 ரூபாய் செலவழிச்சுட்டு, பார்ட்டி ஆயிரம் ரூபாய்க்கு வேலை வாங்குகிறாரே என புலம்புகின்றனர். இப்படியே போனால் தேர்தலுக்குள் நம்ம நிலைமை ரொம்ப மோசமாக ஆகிவிடும் என நிர்வாகிகள் புலம்பும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இதோடு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் ஆர்பி.உதயகுமார் பிளாஸ்டிக் வாளிகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார். உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கும் நேரத்தில், இவரு இப்பதான் பிளாஸ்டிக் வாளிக்கு வந்துள்ளார் என அதே கட்சி நிர்வாகிகள் கமெண்ட் அடிக்கும் நிலைக்கு வந்து விட்டனராம்…!

Tags : Edappadi ,Sasikala ,OPS ,Ramadoss ,Jayalalithaa ,AIADMK ,General ,Chief Minister ,AIADMK Legislative Assembly ,President ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED சொல்லிட்டாங்க…