கங்காவதி: கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, கொப்பல் மாவட்டம், ஹம்பி-அனேகொந்தி பகுதிக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பெண் ஒருவர், உள்ளூர் ஹோட்டல் பெண் உரிமையாளருடன் சேர்ந்து, துங்கபத்ராவின் இடது கரை கால்வாய் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள், இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களை மீட்க வந்த அமெரிக்கரான டேனியல், மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த பங்கஜ் படேலையும், ஒடிசாவைச் சேர்ந்த பிபாஸையும் தாக்கினர். பின்னர், பிபாஸ் (43) கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சங்கப்பூரில் உள்ள சாய்நகரைச் சேர்ந்த மல்ல ஐயப்ப தாசரா என்ற மல்லேஷ், சேத்தன் சாய் காமேஸ்வர ராவ் மற்றும் சரணப்பா என்ற சரணபசவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய கங்காவதி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சதானந்த் நாகப்ப நாயக், நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
