×

குமரியில் கொளுத்தும் வெயில் திற்பரப்பில் பயணிகள் உற்சாக குளியல்

 

குலசேகரம்: குமரியின் குற்றாலம் என்று வர்ணிக்கப்படுவது திற்பரப்பு. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை காணப்படுகிறது. விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்படும். கோதையாற்றில் தண்ணீர் வருகை சீராக உள்ளதால் அருவியில் தண்ணீர் எல்லாப் பகுதிகளிலும் பரந்து விரிந்து மிதமான அளவு கொட்டுகிறது. தற்போது பகல் நேரத்தில் வெயில் அக்னி வெயிலை போன்று கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஆகவே மக்கள் நீர்நிலை சார்ந்த பகுதிகளை நாடி செல்ல தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்கும் ஆர்வத்துடன் வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினமும் காலை முதல் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். விடுமுறை நாட்களில் கடும் கூட்ட நெரிசலில் ஏற்படுவதால் திற்பரப்பு அருவி பகுதி திணறுகிறது. திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆகவே வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் இடம் இல்லாமல் திற்பரப்பு செல்லும் சாலைகளின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.

பயணிகள் குளிக்கும் பகுதி, அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளம் என்று எல்லா இடங்களிலும் குளித்து மகிழ்கின்றனர். இதே போல் திற்பரப்பு தடுப்பணையில் நடக்கும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் அதிகமாக செல்கின்றனர். பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வமுடன் திற்பரப்பு தடுப்பணையில் கடல் போல் நிரம்பி வழியும் கோதையாற்றில் படகு சவாரி செய்து இயற்கை அழகை பார்த்து மகிழ்கின்றனர். மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் திற்பரப்பு அருவியில் விழும் குளிர்ந்த நீர், மரங்கள் அடர்ந்த இயற்கை சூழல் பயணிகளை உற்சாகமடைய செய்கிறது.

 

Tags : Kumari ,
× RELATED அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...