×

பனிக்காலம் முடிந்து வெயில் தாக்கம் அதிகரிப்பு; குழந்தைகள், முதியவர்கள் கர்ப்பிணிகள் பாதுகாப்பு அவசியம்: மருத்துவர்கள் ஆலோசனை

 

வேலூர்: பனிக்காலம் முடிந்து, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் கர்ப்பிணிகள் உஷாராக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். காலநிலை மாற்றத்தினால் இயல்பை விட அதிகளவு வெப்பநிலை மற்றும் பருவம் தவறிய மழைப்பொழிவு, மிக அதிகனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாய உற்பத்தி என அனைத்து தரப்பு மக்களுமே பல்வேறு பொருளாதார பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் பனிக்காலம் முடிந்து, கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 93 டிகிரி அளவுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த 12ம்தேதி 93.6 டிகிரியும், 13, 14ம்தேதிகளில் 93.2 டிகிரியாகவும் வெயில் பதிவானது. வரும் நாட்களில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கலாம். இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதிலிருந்து முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: பனிக்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்குகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். 2026ம் ஆண்டு இயல்பை விட கூடுதலாக வெப்பநிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கோடையில் மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது. கோடையில் அதிக வெப்பம் காரணமாக வியர்வை வெளியேறி நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் உடல் சோர்வு, குறைந்தளவு சிறுநீர் வெளியேற்றம், வலிப்பு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும். வெப்பத்தின் தாக்குதலுக்கு பச்சிளங்குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் செல்போன்களுக்கு அடிமையாகி தாகம் என்ற உணர்வை அறியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே கோடைகாலத்தில் வழக்கத்தை விட கூடுதலான அளவு தண்ணீரை பருக வேண்டும். கோடைகாலத்திற்கு ஏற்ற நுங்கு, பதநீர், தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தளவுக்கு தேவையில்லாமல் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

 

Tags : Vellore ,
× RELATED வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு