×

மகா சிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் கோயில் தேரோட்டம் கோலாகலம்: சிவ…சிவா…கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

 

ராமேஸ்வரம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவ.. சிவா…என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் 9ம் நாளான இன்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, பின் சுவாமி சன்னதியில் கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் சர்வஅலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

காலை 9.30 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கியது. ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிவ.. சிவா.. கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர், முருகன் எழுந்தருளிய தேர்கள் முன்னால் செல்ல தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்களில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர்கள் நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் 10ம் திருநாளான நாளை பிற்பகல் 1 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

 

Tags : Maha Shivarathriyaoti Rameswaram Temple ,Terotum Kolakalam ,Shiva ,Rameswaram ,Maha Shivratri ,Rameshwaram Temple ,Shiva... ,Maha Shivaratri Festival ,Ramanathaswamy Temple ,Ramanathapuram District ,
× RELATED வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு