×

அசாம் காங்கிரசில் உட்கட்சி பூசல்; புதிய கட்சியில் 2 எம்எல்ஏக்கள் ஐக்கியம்: தேர்தல் நேரத்தில் பெரும் பின்னடைவு

 

கவுகாத்தி: அசாம் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகிப் புதிய கட்சியில் இணைவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சிப் பூசல் காரணமாகப் பல்வேறு பிரச்னைகள் நிலவி வந்தன. குறிப்பாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காகத் தற்காலிகமாக நீக்கப்பட்ட பாக்பர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷெர்மன் அலி அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.

ஏற்கனவே சில சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் தயாராகி வரும் நிலையில், கீழ் அசாம் பகுதியில் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியேறுவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ராய்ஜோர் தளம் கட்சியின் தலைவர் அகில் கோகோய் முன்னிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதன்படி மேற்கு கோல்பாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துர் ரஷித் மண்டல் நேற்று முறைப்படி அந்தக் கட்சியில் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஷெர்மன் அலி அகமது இன்று அக்கட்சியில் இணைய உள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரதா சைக்கியா, ‘இது தொடர்பாக எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தத் தகவலும் வரவில்லை. சர்ச்சைக்குரிய நபர்களுக்குப் பொறுப்புகளை வழங்கும்போது ராய்ஜோர் தளம் கட்சி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த அதிரடி மாற்றங்கள் அசாம் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நபர்களுக்குப் பொறுப்புகளை வழங்கும்போது ராய்ஜோர் தளம் கட்சி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

கவுகாத்தியில் பிரியங்கா ஆலோசனை
அசாம் மாநில கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும், தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் காங்கிரசின் மூத்த பார்வையாளர்களான கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தேர்தல் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ள பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் (பிப். 18) இரண்டு நாள் பயணமாக கவுகாத்தி வருகிறார்.

காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகத்திற்கு வரும் அவர், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 35 மாவட்டத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தேர்தல் வியூகம் குறித்து இரவு வரை தீவிர ஆலோசனை மேற்கொள்கிறார். வரும் 19ம் தேதி மாநில நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் அவர், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து அன்றே டெல்லி திரும்புகிறார். பிரியங்காவின் பயணம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுடனான கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளும் இதில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Assam Congress ,New Party ,Gawwati ,Assam State Congress Party ,Akhatti ,
× RELATED மகாராஷ்டிரா அரசியலில் புதிய...