மும்பை: மும்பையில் ஆட்டோ ஓட்டுநரால் நடிகை பிரியா பக்ஷி மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜேஎன்யு’ திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான பிரியா பக்ஷி, கடந்த 14ம் தேதி இரவு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஆட்டோவில் சென்றார். நள்ளிரவில் தனது வீட்டிற்குச் சென்றபோது, ஓட்டுநர் கூகுள் வரைபடத்தில் இல்லாத ஒரு புதிய பாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் அச்சமடைந்த நடிகை, ஆட்டோவை நிறுத்துமாறு பலமுறை கெஞ்சியும், போலீசார் வசம் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டியும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த மறுத்துள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆத்திரத்துடன் ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர், ‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது, சும்மா வந்து விடுகிறீர்கள். இது எங்கள் பகுதி, இனிமேல் இங்கே வராதீர்கள்’ என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ள நடிகை பிரியா பக்ஷி, ‘நாங்கள் வட மாநிலத்தவர்கள் என்பதால் குப்பையைப் போல நடத்தப்படுகிறோம்’ என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், மும்பையில் பிற மாநிலத்தவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதிவு மாநில பாகுபாடுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆட்டோ ஓட்டுநரின் செயல் கண்டிக்கத்தக்கது எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
