×

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்; தேசியவாத காங்கிரசின் இரு அணிகள் இணைவு? நாளை சுனேத்ரா பவார் தலைமையில் ஆலோசனை

 

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகள் இணைவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலத்தின் புதிய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அஜித் பவார் மறைவுக்குப் பிறகு, அவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணியைச் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கடந்த 11ம் தேதி சுனேத்ரா பவார் புதுடெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், தனது அணியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க நாளை (பிப். 17) மும்பையில் சுனேத்ரா பவார் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அணியில் உள்ள 40 எம்எல்ஏக்களில் 35 பேர் மீண்டும் சரத் பவாருடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

திலிப் வல்சே பாட்டீல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியின் எதிர்காலம் குறித்து அனைவரிடமும் விரிவான கருத்துகளைக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மூத்த அமைச்சர் சாகன் புஜ்பால் கூறுகையில், ‘சுனேத்ரா பவாரை கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதே எங்களின் தற்போதைய நோக்கம். கட்சிகள் இணைவது குறித்த இறுதி முடிவு அவர் தலைவர் பொறுப்பேற்ற பின்னரே எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Maharashtra ,Nationalist Congress ,Sunetra Bawar ,Mumbai ,Nationalist Congress Party ,Ajit Bawar ,
× RELATED ராஜஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டு...